நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனியாக 53 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியை தழுவியது. இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து ஆராய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் கூடியது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்பு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரை நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் கேரள மாநிலம் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி தன்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த வயநாடு மக்களைவை தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவித்து கொண்டார். அதன் தொடர்ச்சியாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தான் வெற்றி பெற்ற மக்களவை தொகுதியான ரேபரேலிக்கு இன்று பயணம் மேற்கொண்டார். அவரது மகளும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார். ரேபரேலி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சோனியா காந்தி சென்றுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.