அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில், கரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்தியாவிலும் 'கோவிஷீல்ட்' என்ற தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னோட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னோட்டத்தை ஆய்வுசெய்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இந்தியா முழுவதும் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாகச் செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், பாஜகவின் தடுப்பூசியை நம்பமுடியாது எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "நான் இப்போது தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளமாட்டேன். பாஜகவின் தடுப்பூசியை நான் எப்படி நம்புவது?. எங்கள் அரசு அமையும்போது அனைவரும் இலவச தடுப்பூசியைப் பெறுவார்கள். எங்களால் பாஜகவின் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள முடியாது" எனக் கூறியுள்ளார்.
கரோனா தடுப்பூசியை பாஜகவின் தடுப்பூசி எனவும், அதனைச் செலுத்திக் கொள்ளமாட்டேன் எனவும் அகிலேஷ் யாதவ் கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.