பில்லி சூனியம் வைத்ததாக சந்தேகப்பட்டு 6 முதியவர்களின் பற்களை பிடுங்கி, மனித கழிவுகளை உண்ணவைத்த கொடூரம் ஒடிசா மாநிலத்தில் நடந்துள்ளது.
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கோபர்புர் கிராமத்தில் சமீபகாலமாக, நோய்வாய்ப்பட்டு அக்கிராம மக்கள் உயிரிழப்பது தொடர்கதையாகி வந்துள்ளது. கடந்த 6 மாதத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அந்த கிராமத்தில் மேலும் 7 பேருக்கு உடல்நிலை சரியில்லை. ஊரில் தொடர்ந்து இப்படி நடப்பதற்கு உள்ளூரைச் சேர்ந்த 6 முதியவர்கள் சூனியம் வைத்ததே காரணம் என அக்கிராம மக்கள் நம்பியுள்ளனர்.
இதனால் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சந்தேகத்துக்குரிய 6 முதியவர்களை வீட்டை விட்டு வெளியே இழுத்துவந்து, பொது வெளியில் வைத்து அவர்களது பற்களை பிடுங்கியுள்ளனர். பின்னர், அவர்களை ஒன்றாகக் கூடி நின்று சரமாரியாகத் தாக்கிய அந்த கிராம மக்கள், மனித கழிவை உன்ன அவர்களை கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர்களை காப்பாற்றவோ, இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கவோ அப்பகுதி மக்கள் யாரும் முன்வராத நிலையில், தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து முதியவர்களை மீட்டனர். 6 முதியவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 22 பெண்கள் உட்பட 29 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.