
மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி எல்லையில் முற்றுகையிட்டுள்ள அவர்கள், மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
இந்தநிலையில், சிங்கு எல்லைக்கு அருகில் உள்ள பகுதியிலிருந்து 45 வயதான விவசாயி ஒருவரின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இறந்த விவசாயியின் பெயர் குர்பிரீத் சிங் என்றும், அவர் பஞ்சாபின் ஃபதேகர் சாஹிப் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறியுள்ள போலீசார், அவர் வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெற்றுவரும் போராட்டத்தில் பங்கேற்றிருந்தார் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், குர்பிரீத் சிங்கின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீசார், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.