2021- 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது; "சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் பொருளாதாரம் மீண்டு வருகிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தில் ரூபாய் 27 லட்சம் கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உலகிலேயே கரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டம் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்துள்ளது. சுயசார்பு இந்தியா திட்டம் 5 மினி பட்ஜெட்டுகளுக்கு சமமானது. பொருளாதாரம் வளர்வதற்குத் தேவையான வாய்ப்புகள் அனைத்தையும் அரசு பயன்படுத்தி வருகிறது.
கரோனா காலத்தில் 80 கோடி மக்களுக்கு தடையின்றி உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. 2021- ஆம் ஆண்டிலும் கரோனாவுக்கு எதிரான போர் தொடரும். புதிய தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும். ரூபாய் 54,184 கோடி மதிப்பில் பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். சுயசார்பு இந்தியா திட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான அம்சங்கள் இந்தப் பட்ஜெட்டில் உள்ளன. சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீடு இந்தப் பட்ஜெட்டில் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. தற்காப்பு, குணப்படுத்துதல், சரியான சிகிச்சை அளித்தல் ஆகிய 3 விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 2021- 2022 ஆம் ஆண்டு பட்ஜெட் சுகாதாரம் உள்ளிட்ட 6 தூண்களை உள்ளடக்கியது" என்றார்.