
ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தில் செயல்படும் அரசுப் பள்ளி ஒன்றில் 11 வயது பழங்குடியின மாணவி 6 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மாணவி வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று வந்த நிலையில், கடந்த 9 ஆம் தேதி பள்ளியின் தலைமை ஆசிரியரும், அதே பள்ளியில் பணியாற்றும் மற்றொரு ஆசிரியரும் சேர்ந்து மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இதனை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளனர்.
அதனால் பயந்துபோன மாணவி நடந்த சம்பவத்தை வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் மாணவிக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவியைப் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்ததில் உண்மை தெரியவந்தது.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் குண்டேய் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டு இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.