மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நுழைவு வாயில் பகுதியில் இருந்து எலிபெண்டா தீவை நோக்கி சொகுசு படகு நேற்று (18-12-24) கடலில் பயணித்துக் கொண்டிருந்தது. இந்த சொகுசு படகில் 110க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பயணித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
சுமார் 8 கி.மீ தொலைவு பயணித்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென்று அங்கு வந்த சிறிய ரக படகு ஒன்று சொகுசு படகு மீது மோதியது. இந்த விபத்தால், சொகுசு படகு மற்றும் சிறிய ரக படகு ஆகியவை சேதமடைந்து, கடல் நீரில் மூழ்கியது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கடலோர காவல்படை, துறைமுக ஊழியர்கள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர மீட்பு பணிக்குப் பிறகு, 101 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். 13 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் 5 பேர் மாயமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை தேடும் பணியில் கடலோர காவல்படை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடலில் பயணித்த படகுகள் விபத்துக்குள்ளாகி 10க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.