மக்களவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி சார்பில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா நிசாமாபாத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் போட்டியிடும் தொகுதியில் அவருக்கு எதிராக 1000 விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கானா மாநில முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா தற்போதும் எம்.பி யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கவிதா கடந்த தேர்தலின் போது மஞ்சள், சூலம் ஆகிய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்து தருவேன் என வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால் அதனை வழங்காததால் அதிருப்தி அடைத்த விவசாயிகள் அவர் போட்டியிடும் தொகுதியில் தங்கள் எதிர்ப்பை காட்டும் விதமாக 1000 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனு தாக்கல் செய்ய 25,000 ரூபாய் பணமும், 10 வாக்காளர்களின் கையெழுத்தும் தேவை என்பதால் அந்த தொகுதியில் உள்ள மக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு அதன்மூலம் வேட்புமனுக்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்த விவசாயிகளில் 43 பேர் தங்களது பரிந்துரைப் பத்திரங்களை பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஒரே தொகுதியில் இவ்வளவு வேட்புமனுக்களை குவிந்ததால் தேர்தல் ஆணையம் செய்வதறியாது திகைத்து வருகிறது என செய்திகள் வெளியாகியுள்ளன.