திருமண விழா ஒன்றில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் பீகார் மாநிலத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவை அடுத்த பாலிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்குக் கடந்த ஜூன் 15-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் நூற்றுக்கணக்கான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்ட நிலையில், திருமணம் நடைபெற்ற இரண்டு நாட்களில் மணமகன் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டும், கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படாமலேயே அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்தச் சூழலில், இறப்புக்குக் காரணம் கரோனா பாதிப்பாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததையடுத்து, மணமக்கள் வீட்டார் மற்றும் திருமணத்திற்கு வருகை தந்த உறவினர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி நடத்தப்பட்ட இந்தத் திருமணத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.