
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி இருந்தது. இதன் மூலம் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரபரப்பாகப் பேசப்பட்டது.அதே சமயம் பா.ஜ.க.வின் தற்போதைய மாநில தலைவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் வைத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனால் தமிழக பா.ஜ.க. தலைவர் விரைவில் மாற்றப்படுவார் எனச் செய்திகள் வெளியாகி இருந்தது. அதோடு பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணிக்கு வசதியாகத் தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவரை நியமிக்க வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இத்தகைய சூழலில் தான் தமிழக பா.ஜ.க.வின் அடுத்த தலைவருக்கான பட்டியலில் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பா.ஜ.க. சட்டமன்ற குழுத் தலைவரும், அக்கட்சியின் மாநில துணைத்தலைவரான நயினார் நாகேந்திரன் ஆகியோர் உள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் மத்திய உள்துறை அமைச்சர் 2 நாள் பயணமாக நேற்று (10.04.2025) இரவு 10.20 மணியளவில் சென்னை வருகை தந்தார்.
கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள அமித்ஷா இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார் என்று கூறப்படுகிறது. கூட்டணிக்கட்சி தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் தற்போதைய தகவலாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை சந்திக்க இருப்பது உறுதியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.