புதுச்சேரி மரப்பாலம் அருகே உள்ள வசந்த நகரில் உள்ள வாய்க்காலை ஆழப்படுத்தி பக்கவாட்டு சுவர் எழுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாய்க்காலை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 12 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் வாய்க்காலின் அருகில் இருந்த சுவர் இடிந்து விழுந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 8 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 3 பேர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கடந்த ஜனவரி 22 ஆம் தேதி புதுச்சேரி ஆட்டுப்பட்டி பகுதியில் உள்ள உப்பனாறு கால்வாய் அருகே புதிய பேருந்து நிலையத்திற்கும், காமராஜர் சாலைக்கும் இடையே பாலம் அமைக்கும் பணி நடைபெற்ற போது அதற்காக கால்வாயை ஆழப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த சூழலில் ஓட்டுநர் சுரேஷ் என்பவர் புதிதாக கட்டி வந்த 3 மாடிக் கட்டடம் ஒன்று கால்வாயை ஆழப்படுத்தும் பணியால் விரிசல் ஏற்பட்டு சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்து தரைமட்டமானது குறிப்பிடத்தக்கது.