Skip to main content

’நாங்களும் நேரம் வரும்போது முடிவைச்சொல்வோம்’ - மு.க.ஸ்டாலினுக்கு குஷ்பு பதில்

Published on 26/07/2018 | Edited on 26/07/2018
ks

 

மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நிலையில், அதற்கான ஆயத்தபணிகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.  காங்கிரசும், பாஜகவும் தேர்தல் வியூகங்களை அமைத்து வருகிறது.   பாஜக, காங்கிரசுக்கு மாற்றாக 3-வது அணியை அமைப்பதற்கு மாநில கட்சிகளிடையே மம்தா ஆதரவு திரட்டி வந்தபோது, அது தொடர்பாக டுவிட்டரில் கருத்து வெளியிட்டிருந்த மு.க.ஸ்டாலின், மாநில கட்சிகளின் ஒற்றுமைக்கு திமுக எப்போதும் துணை நிற்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.  ஸ்டாலின் கருத்துக்கு மம்தா பானர்ஜி டுவிட்டரில் நன்றி தெரிவித்தார்.  ஆனால் அதன்பின்னர், பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைவு அவசியம் என்பதை உணர்ந்து, காங்கிரசோடு கூட்டணி சேரத்தயார் என்று மம்தா அறிவித்திருக்கிறார்.  

 

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,  ‘’ராகுல்காந்தியை பிரதம வேட்பாளராக ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு, ஏற்றுக்கொள்வோம் என்று சொல்லாமல் நேரம் வரும்போது முடிவைசொல்வேன் என்று கூறியிருக்கிறாரே திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின். கூட்டணியில் இருந்துகொண்டே இப்படிச்சொல்வது சரியா’’ என்று கேள்விக்கு, ‘’அதி புத்திசாலித்தனமான பதில்’’ என்று கூறினார்.

 

அவர் மேலும், ‘’கூட்டணி குறித்து நாங்களும் நேரம் வரும்போது முடிவைச்சொல்வோம்.  நாடாளுமன்ற தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுக்கும்’’என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்