Skip to main content

தலைவராகப் போகும் தளபதியின் ஆணைக்கு கட்டுப்படுவோம்: துரைமுருகன்

Published on 14/08/2018 | Edited on 14/08/2018
dmk


விரைவில் தலைவராகப் போகும் தளபதியின் ஆணைக்கு கட்டுப்படுவோம் என திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாகவும், திமுக குறித்து தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து விவாதிக்கவும், திமுக செயற்குழு கூட்டம், சென்னையில் அறிவாலயத்தில், இன்று காலை, 10:00 மணிக்கு துவங்கியது. கூட்டத்திற்கு செயல் தலைவர், ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். பேராசிரியர் க.அன்பழகன், துரைமுருகன், கனிமொழி, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் திமுக செயற்குழு அவசர கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

முதலில், கலைஞரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில், நிர்வாகிகள் பேசி வருகின்றனர். இதில் திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பேசும்போது,

எனக்கு இரங்கல் கூறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் கலைஞருக்கு இரங்கல் கூற வைத்துவிட்டார். ஆதிக்க மனப்பான்மையுடன் இருப்பவர்களை எதிர்ப்பதற்கு சொல்லிக்கொடுத்தவர் கலைஞர். எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் அளிக்க முற்பட்டபோது எதிர்த்தேன். எம்.ஜி.ஆர். டாக்டர் பட்டம் பெற தடையாக இருக்காதே என கூறினார் கலைஞர். எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதற்கான தீர்மானத்தை என் மூலம் முன்மொழிய வைத்தார் கலைஞர்.

எம்.ஜி.ஆர். அழைத்த போதும் செல்லாமல் கலைஞர் உடனேயே இருந்தேன். அதிமுகவுக்கு எம்ஜிஆர் அழைத்தபோது செல்லாமல் கலைஞர் காலடியில் கிடந்தேன். 50 ஆண்டுகள் எந்தவித மன வருத்தமும் இன்றி கலைஞருடன் இருந்திருக்கிறேன். உறங்கும் நேரம் தவிர எப்போதும் கலைஞருடன்தான் இருந்திருக்கிறேன். நண்பனாக சில விஷயங்களை என்னுடன் பகிர்ந்துள்ளார் கலைஞர். எனக்கு இருதய அறுவை சிகிச்சையின்போது ஆதரவாக இருந்தார். விரைவில் தலைவராகப் போகும் தளபதியின் ஆணைக்கு கட்டுப்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்