தமிழர் திருநாளான பொங்கல் திருநாள், போகி பண்டிகையுடன் தொடங்கி (13.01.2025) தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அதே சமயம் பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு, மீண்டும் திரும்பிய வண்ணம் உள்ளனர்.
முன்னதாக தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டது. இதன் மூலம் 2 கேடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள் எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பொதுமக்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்புகள் விநியோகம் செய்யப்பட்டன.
அதே சமயம் பொங்கல் பரிசை பெறுவதற்று இன்று (18.01.2025) கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 25ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்புகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். மேலும் இன்று வரை சுமார் 1.87 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு அதாவது 85% பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.