ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்து நேற்று முன்தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க- நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் உள்பட 47 பேர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாக கூட்ட அரங்கில் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது. அப்போது தி.மு.க வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு மைக் சினமும் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு வேட்பாளருக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வேட்பாளர் மற்றும் அவர்களது முகவர்களிடம் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இந்நிலையில் சுயேட்சை வேட்பாளர் பத்மாவதி என்பவருக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் போது மற்ற சுயேட்சை வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பத்மாவதி கர்நாடகா மாநிலம் பெங்களூரு, உதயா நகர், மஞ்சு நாத்சுவாமி நிலையம் பகுதியைச் சேர்ந்தவர். இவரது ஓட்டு கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜபுரம் தொகுதியில் உள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எவ்வாறு போட்டியிடலாம் என்று வேட்பாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பத்மாவதிக்கு மட்டும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. வேட்பாளர் பத்மாவதி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடத் தகுதியானவரா? என்று அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் முழுவதுமாக வெளியிடுவது நிறுத்தப்பட்டது.
இது குறித்து அறிந்ததும் ஈரோடு மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு விரைந்து வந்தார். தேர்தல் நடத்தும் அதிகாரி மனிஷ் அறையில் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இந்த குழப்பம் நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் நள்ளிரவு வரை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் நள்ளிரவு 1.30 மணி அளவில் சர்ச்சைக்குரிய பெண் வேட்பாளர் பத்மாவதியின் மனு நிராகரிக்கப்பட்டு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கர்நாடகா மாநில பெண் வேட்பாளர் மனு ஏற்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கர்நாடகா பெண் வேட்பாளர் அவர் முன் மொழிந்த 10 பேர், அவரது அபிடவிட்டில் கர்நாடகா நோட்டரி பப்ளிக் கையெழுத்திட்டது, அவரது வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்து விவரமும் கர்நாடகாவில் உள்ளதை தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்கள் என அனைவரும் கவனிக்காமல் விட்டது எப்படி என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினார். இதன் அடிப்படையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஸ் மீது நடவடிக்கை பாயும் என தகவல் வெளியானது.
இந்நிலையில் ஈரோடு தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷை திடீரென இடமாற்றம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அவருக்கு பதிலாக ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் உள்ள ஸ்ரீகாந்த் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்று காலை ஸ்ரீகாந்த் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து முறைப்படி ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையளர்கள் கையொப்பமிட்டுப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் ஸ்ரீகாந்த் தேர்தல் அலுவலர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டார்.