2016, ஜூலை 11-ஆம் தேதி, குஜராத் மாநிலம் உனா தாலுகாவின் மோட்டா சமாதியாலா கிராமத்தில் நான்கு பேர் இறந்த பசுவொன்றை, தோலுரித்து மாமிசம் வேறு, தோல்வேறு என பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்த விபரீதம் அரங்கேறியது.
எஸ்.யு.வி. டைப் காரொன்றில் திபுதிபுவென வந்திறங்கிய பசுப் பாதுகாவலர்கள் இறைச்சிக்காக பசுவைக் கொன்றதாகச் சொல்லி அவர்களைத் தாக்கத் தொடங்கினர். அது இறந்த பசுவென்று எத்தனையோ எடுத்துச்சொல்லியும் அவர்கள் காதில் வாங்கவில்லை.
முரட்டுத்தனமாக இரும்புக் குழாய்களால் அடித்தும், கையோடு கொண்டுவந்த காரில் 15 கிலோமீட்டர் தூரம் கட்டியிழுத்துச்சென்றும் அசம்பாவிதத்தை அரங்கேற்றினர். கடைசியாக அவர்களை காவல்நிலையம் முன் கொண்டுசென்று விடுவித்தனர். இத்தனையும் பொதுமக்கள் கண்முன்னால் நடைபெற்றது. தாங்கள் பெருமைக்குரிய ஏதோ ஒரு செயலை செய்துவிட்டதுபோல் அதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வேறு வெளியிட்டனர்.
அதற்கெதிராக நாடே கண்டனக் குரல் எழுப்பியது. தலித்துகள் ஒருங்கிணைந்து அங்கே நடத்திய மாபெரும் பேரணி குஜராத்தையே குலுங்கவைத்தது. அன்றைய முதல்வர் ஆனந்திபென் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமென சமாதானம் செய்தார். வருடங்கள் இரண்டு கடந்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்திருக்கிறதா?
இல்லையென்கிறார், பாதிக்கப்பட்டவர்களின் தந்தையான பாலுபாய் சர்வையா. அச்சம்பவம் நடந்து இரண்டாண்டுகள் ஆனபின்னரும் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று சொல்லி சம்பந்தப்பட்ட நான்கு இளைஞர்களின் குடும்பம் உட்பட 300 பேர் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி புத்த மதத்தைத் தழுவியுள்ளனர்.
இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட தனது மூன்று மகன்கள் சார்பாகப் பேசிய பாலுபாய் சர்வையா, “மனித மதிப்பீடுகளைக் கருத்தில்கொள்ளாத, எங்களுக்கு நீதி வழங்காத சமூகத்தைக் குறித்த ஏமாற்றத்தாலேயே மதம் மாறும் முடிவுக்கு வந்தோம். இந்த சம்பவம் நடந்தபோது அப்போது ஆட்சியிலிருந்த முதல்வர் ஆனந்திபென் படேல் எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணமாக நிலமும் வேலையும் தருவதாகக் கூறியிருந்தார். தவிரவும் என் மகன்களைத் தாக்கிய பசுப் பாதுகாவலர்கள்மேல் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருந்தார். எதுவும் நடக்கவில்லை.
இந்து மதத்தைக் கைவிடுவதால் எங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் வந்துவிடப்போவதில்லை என தெரியும். ஆனாலும், எங்களை தாக்கியும் வதைத்தும் விலங்குகளைப் போல் நடத்தும், இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் கடவுள்களின்முன் இனியும் பிரார்த்தனை செய்ய எங்களால் முடியாது” என்கிறார் உறுதியாக.