''எங்க வீட்டுக்காரரு எங்களோட உட்கார்ந்து சாப்பிடுகிறார், பசங்களோடு பேசுகிறார், விளையடுகிறார், ரொம்ப சந்தோஷமா இருக்கு'' என ஊரடங்கு தொடங்கிய ஒரு வாரத்தில் வாட்ஸ் அப்புகளில் பெண்கள் சிலர் வீடியோக்களை போட்டனர். தற்போது அதே பெண்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்.
சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமாநெரு டவுன் பகுதி ஓம் சக்தி நகரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மதுபிரியர். கரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து மது அருந்தாமல் மனைவி, குழந்தையுடன் சந்தோஷமாக இருந்துள்ளார். ஊரடங்கு காலமான நாற்பது நாட்களும் குடும்பம் சந்தோஷமாக நகர்ந்தது.
ஊரடங்கு நீடித்தாலும் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதால் ஆந்திர அரசு மே 4 ஆம் தேதி மதுக்கடைகளைத் திறந்தது. முதல்நாளே கூட்டம் அலைமோதியது. இதனை அறிந்த சொக்கலிங்கம், யாருக்கும் தெரியாமல் மது அருந்திவிட்டு, மதுபாட்டில்களோடு வீட்டுக்கு வந்துள்ளார். அதிர்ச்சியடைந்த மனைவி ஜெயதாம்பாள் சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சொக்கலிங்கம், குடிபோதையில் ஜெயதாம்பாளை அடித்துவிட்டு வெளியேறியுள்ளார். மனமுடைந்த ஜெயதாம்பாள், மகள் நந்தினியுடன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மதுக்கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளே இரண்டு உயிர்கள் பறிபோனது ஆந்திர மாநிலத்தைத் தாண்டி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில்தான் மே 7 ஆம் தேதி சில நிபந்தனைகளுடன் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழக பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுக்கடை திறப்பு அறிவிப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: அரசிடமிருந்து பேரிடர் பாதுகாப்புக்கான முக்கிய அறிவிப்பு வரும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வந்ததோ, டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்புக் குறித்த அறிவிப்பு! ஊரடங்கினால் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பைச் சரிசெய்ய, மக்கள் மீது பழிபோடுவது நியாயமல்ல! ஊரடங்கு காலத்தில் மீண்டும் மீண்டும் மக்கள் கூட்டமாகக் கூடுவதற்கான சூழலை உருவாக்குவது, கரோனா வைரஸ் நோய்த் தொற்றை அதிகரிக்கவே செய்யும். ஆளுமையும் அக்கறையும் உள்ள எந்த ஓர் அரசும் இப்படிப்பட்ட அபாயகரமான நடவடிக்கையை மேற்கொள்ளாது.
டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் கே.திருச்செல்வன்: தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மதுபானக் கடைகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையிலான கட்டமைப்பு இல்லாத நிலையில் தான் உள்ளன. அத்தகைய நிலையில் உள்ள கடைகளில் ஊழியர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி விற்பனையில் ஈடுபட முடியாத நிலையும், குடிமக்கள் கும்பலாகக் குவிந்து வாங்கும் நிலையும் ஏற்படும். மேலும் மதுக்கூடங்கள் இயங்க அனுமதிக்காத நிலையில் குடிமக்கள் கடைக்கு அருகிலேயே மதுவைக் குடிப்பதும், எச்சில் துப்புவதும், வாந்தி எடுப்பதுமான சூழ்நிலையும் நோய்த் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: அண்டை மாநிலங்களுக்கு மது அருந்த ஒரு சிலர் சென்றிருக்கலாம். அது தமிழகத்தின் மக்கள் தொகையில் 0.0001% கூட இருக்காது. அவர்களுக்காகத் தமிழகத்தில் ஒன்றரை கோடி குடும்பங்களைப் பாதிக்கும் வகையில் மதுக்கடைகள் திறக்கப்படுவதை ஏற்க முடியாது.
கோயம்பேடு சந்தையில் நடந்த ஊரடங்கு மீறல்கள் காரணமாக கடந்த சில நாட்களாக கரோனா நோய்த் தொற்று மிகப் பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. மதுக்கடைகள் திறக்கப்பட்டால் நோய்த் தொற்று பரவும் வேகம் மேலும் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, கடந்த 40 நாட்களாக இல்லாமல் இருந்த சட்டம் & ஒழுங்கு பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். எனவே, மதுக்கடைகளைத் திறப்பதால் ஏற்படும் தீமைகளை உணர்ந்து, இம்முடிவை அரசு கைவிட வேண்டும்; மதுவிலக்கை அறிவிக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சி சீமான்: தமிழகத்தில் நோய்த்தொற்று சமூகப் பரவலை எட்டியுள்ள நிலையில் மதுபானக் கடைகளைத் திறப்பது கரோனாவைச் சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்பதற்கு ஒப்பானது. அத்தகைய வரலாற்றுப் பிழையை செய்து பெரும்பழிக்கு ஆளாக வேண்டாம். மதுபானக்கடைகளைத் திறக்கும் முடிவினை உடனடியாகக் கைவிட வேண்டும்.
கொ.ம.தே.க. ஈஸ்வரன்: டாஸ்மாக் மது வகைகளைக் குடிப்பவர்களுக்கு உடம்பில் எதிர்ப்புச் சக்தியும் குறையும். நோய்ப் பரவலை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற சூழ்நிலையில் மக்கள் என்ன ஆனாலும் பரவாயில்லை என்ற நோக்கத்தோடு தமிழக அரசு வருமானத்திற்கு வழி தேடியிருப்பது வருத்தமளிக்கிறது.
மகளிர் ஆயம் ம.லெட்சுமி மற்றும் அருணா: கடந்த ஒரு மாதமாக இருந்த குடும்ப அமைதி நிரந்தரமாகச் சீரழியப் போகிறது. கர்நாடகத்திலும், ஆந்திரத்திலும், டெல்லியிலும் மதுக்கடை திறந்தவுடன், முண்டியடித்துக் கொண்டு செல்லும் மக்களைப் பார்க்கும்போது, அதேபோல் இங்கேயும் நடந்து- அடுத்த அலை கரோனா பரவலுக்கு தமிழ்நாடு அரசே பாதை திறந்து விடுவதுபோல் உள்ளது.
மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்: கோயம்பேட்டை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப்படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களைப் பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு.