தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸும், பா.ஜ.க.வும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.
இதையொட்டி, ராஜஸ்தானில் பலோத்ரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று (21-11-23) நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ”பிரதமர் மோடி டி.வியில் தோன்றி இந்து- இஸ்லாமியர்கள் குறித்து பேசுவார். ஆனால், சில நேரங்களில் திடீரென்று கிரிக்கெட் போட்டி பார்ப்பதற்காக அவர் சென்றுவிடுவார்.
நமது கிரிக்கெட் வீரர்கள் உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை கொண்டிருந்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசத்தின் முன்னோடி அவர்களை தோற்கடித்து விட்டார். தொலைக்காட்சி சேனல்கள் இதை பற்றி சொல்லாது. ஆனால், இது பொது மக்களுக்கு தெரியும்.அதானி, அம்பானி போன்ற தொழிலதிபர்களுக்காகவே பிரதமர் மோடி பணியாற்றி வருகிறார். பொதுமக்களிடம் இருந்து ஜி.எஸ்.டி வரியை வசூலித்து அதானி, அம்பானியிடம் கொடுக்கிறார். பெரும் தொழிலதிபர்களிடம் கடன்களை தள்ளுபடி செய்து அவர்களுக்கு எல்லா நன்மைகளையும் செய்கிறார்” என்று பேசினார்.