Skip to main content

மிக்ஜாம் புயல் பாதிப்பு; முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Mikjam storm damage; Personal inspection by Chief Minister M.K.Stal

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் சென்னையில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட புரசைவாக்கம், கொசப்பேட்டை, ஓட்டேரி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட மழை பாதிப்புகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் எனப் பலரும் உடன் இருந்தனர். அதேபோன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவுகளை வழங்கினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மீண்டும் ஒரு ஆணவக்கொலை; சென்னையில் பயங்கரம்

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Again a manslaughter; Terrible in Chennai

சென்னை பள்ளிக்கரணையில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். சல்லடையான்பேட்டை பகுதியில் சர்மிளா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் பிரவீன்-சர்மிளா திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் எதிர்ப்பை மீறி இந்த திருமணமானது நடைபெற்றது.

காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் அவர்கள் வசித்து வந்த நிலையில் ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து நேற்று இரவு அந்த பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பள்ளிக்கரணை போலீசார் நடத்திய விசாரணையில் இது சாதி ஆணவப் படுகொலை என்பதை அறிந்து கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மீண்டும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

மூன்று மணி நேர தேடுதலுக்குப் பின் உடல்கள் மீட்பு; கிரிவலம் சென்று திரும்பியபோது நிகழ்ந்த சோகம்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
nn

செஞ்சி அருகே சாலையோர விவசாய கிணற்றில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிராஜ் - சத்யா தம்பதி தங்களது குடும்ப உறுப்பினர்கள் ஒன்பது பேருடன் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றிருந்தனர். திருவண்ணாமலையில் கிரிவலத்தை முடித்துக் கொண்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள புலிவந்தி கிராமத்தில் உள்ள அவர்களுடைய குலதெய்வ கோயிலுக்கு சென்றுள்ளனர்.

பின்னர் நள்ளிரவில் விழுப்புரம் கப்பை கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்பொழுது ஒன்பது பேரும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த நிலையில் அவர்கள் சென்ற ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர கிணற்றில் கவிழ்ந்தது. இதில் அனைவரும் நீரில் மூழ்கினர். நான்கு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் நீரில் தத்தளித்து பின்னர் கிணற்றில் இருந்து வெளியேறினர்.

இதில் ஆட்டோ  ஓட்டுநரின் மகன்கள் பிரகதீஸ்வரன், ஹரி பிரசாந்த் ஆகிய இருவரும் நீரில் மூழ்கினர். உடனடியாக மீட்புப் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் கிணற்றிற்குள் இறங்கி நடத்திய சுமார் 3 மணி நேர தேர்தலுக்குப் பிறகு இரண்டு சிறுவர்களின் உடல்களையும் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட உடல்கள் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. செஞ்சி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் ஆட்டோ விவசாய கிணற்றில் கவிழ்ந்து இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.