சென்னையைத் தவிர்த்து தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதனை கண்டிக்கும் வகையில் திமுகவின் கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தும் என அறிவித்திருந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் நிர்வாகிகளும் கறுப்பு சட்டை அணிந்து, தங்களின் வீடுகளுக்கு முன்பு நின்று கொண்டு மதுக்கடைகள் திறப்புக்கும் அதனை அனுமதித்த எடப்பாடிக்கும் எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்ரம் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், மதுக்கடை திறப்புக்கு ஆதரவான கருத்தை பதிவு செய்திருக்கிறார். கார்த்தி சிதம்பரத்தின் இந்த கருத்து ஆட்சியாளர்களுக்கும் அதிமுகவினருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அதே சமயம், கார்த்தி சிதம்பரத்தை மையப்படுத்தி அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரான கராத்தே தியாகராஜன். அவரது அறிக்கையில், ’’ மதுக்கடைகள் திறப்புக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தோழமை கட்சிகள் கண்டித்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தோழமை கட்சிகள் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
ஆனால், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக விரைவில் வரவிருக்கிறார் என பேசப்படும் கார்த்தி சிதம்பரம், மதுவிலக்கு உலகளவில் தோல்வியடைந்துள்ளது. தமிழகத்தில் மது கடைகளை மூடியிருக்கக் கூடாது. மது கடைகளை சில மணி நேரம் திறந்து வைத்திருக்க வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன் லைனில் மது விற்பனை செய்ய வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் கடம்பூர் ராஜுவை கோட்டையில் சந்தித்து மனு கொடுத்துவிட்டு வெளியே வந்த காங்கிரசின் அகில இந்திய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு, கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக எடுத்து வருகிறார் என பாராட்டு தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சத்யமூர்த்தி பவனில் நடந்த காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் என்கிற முறையில் சில கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தேன். இதனை விரும்பாத திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியை நிர்பந்தப்படுத்தி என்னை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவதற்கு வலியுறுத்தினார். இதனை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியே சொல்லியிருக்கிறார்.
அந்த வகையில், கூட்டணி தர்மத்துக்கு எதிராக எடப்பாடி அரசை பாராட்டிய குஷ்பு மீதும், எடப்பாடி அரசின் மது கடைகள் திறப்புக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்துள்ள கார்த்தி சிதம்பரம் மீதும் நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்துவரா ? என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது போல இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க முகுல்வாஸ்னிக் மற்றும் கே.சி. வேணுகோபாலுக்கு கே.எஸ்.அழகிரி கடிதம் எழுதுவாரா ? ‘’ என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார் கராத்தே தியாகராஜன்.