
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் முப்படைகள் கூட்டாக இணைந்து பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலாப் பயணிகளை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் நடந்துள்ளது. இந்தியா நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை மீறி தாக்குதல் நடத்தி வருகிறனர். இந்த தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் என 16 உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தானின் இரண்டு போர் விமானங்கள் இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே பதில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் எல்லைப் பகுதிகளில் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு இந்திய அளித்த பதிலடி குறித்துவிளக்கமளிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, லெப்டினன்ட் கர்னல் சோஃபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் இன்று (09-05-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அதில் பேசிய லெப்டினன்ட் கர்னல் சோஃபியா குரேஷி, “மே 7 மற்றும் 8 ஆம் தேதி இரவு, பாகிஸ்தான் இராணுவம், இந்திய இராணுவ உள்கட்டமைப்பை குறிவைக்கும் நோக்கத்துடன் மேற்கு எல்லை முழுவதும் பல முறை அத்துமீறி தாக்கியது. இது மட்டுமல்லாமல் விதிமுறைகளை மீறி பாகிஸ்தான் இராணுவம், எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் கனரக ஆயுதங்களையும் வீசியது. 36 இடங்களில் ஊடுருவ முயற்சிக்க சுமார் 300 முதல் 400 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. அனைத்து தாக்குதல் முயற்சிகளையும், ட்ரோன்கள் மூலம் இந்திய ஆயுதப்படைகள் தாக்கியுள்ளது. இந்த தாக்குதல் மூலம், பாகிஸ்தானுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தியா சுட்டு வீழ்த்திய ட்ரோன்கள் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை என தெரிய வந்துள்ளது. பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களின் பாகங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.