நாட்டுப்புறப்பாடகர்கள் புஷ்பவனம் குப்புசாமி - அனிதாகுப்புசாமி தம்பதி, கடந்த சில தினங்களுக்கு முன்பு அளித்த வீடியோ பேட்டி ஒன்றில், நாட்டுப்புறப்பாடல் என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனம் பேசி, ஆபாசமாக மேடையில் ஆடிப்பாடும் இளம்பாடகர்களை கண்டித்திருந்தனர்.
மேடையில் மனைவியை வைத்துக்கொண்டே, ’கடலைக்கொல்லை ஓரத்திலே காடப்புறா..’ பாடலுக்கு குட்டைப்பாவாடை போட்ட பெண்களுடன் ஆபாச சைகையில் பாடுகிறான். அதை யூ-டியூப்பில் பார்த்தேன். மனைவியை வைத்துக்கொண்டே இவ்வளவு ஆபாசமாக பாடுகிறான். அதை வேறு நாட்டுப்புறப்பாடல் என்று கொச்சைப்படுத்துகிறான் என்று புஷ்பவனம் கொதித்திருந்தார்.
அவர் மனைவி அனிதா புஷ்பவனம், நாங்கள் இதுவரை எந்த கச்சேரியிலும் ஆடியது கிடையாது. இப்போது இவர்கள் இப்படி செய்வதால், தற்போது எங்கள் கச்சேரிக்கு புக் செய்பவர்கள், நீங்கள் ஆடுவீங்கதானே..என்று கேட்கிறார்கள். இல்லை...நாங்கள் அப்படி எல்லாம் செய்வது கிடையாது என்று சொல்லும்போது, எல்லோரு அப்படி செய்யுறாங்களே... நீங்கள் அப்படி இப்படி கொஞ்சம் ஆடினால் என்ன என்று கேட்கிறார்கள். எங்களைப்போன்றவர்கள் எல்லாம் நாட்டுப்புறப்பாடலை உயரத்தில் கொண்டு வைத்திருந்தோம். இப்போது வந்தவர்கள் அதை கீழே இறக்கிவிட்டார்கள். இதனால் நாங்கள் பாடுவதையே விட்டுவிடலாமா என்ற நிலைக்கு வந்துவிட்டோம் என்று தனது வருத்தத்தை பதிவு செய்திருந்தார்.
’’ஆடுவது அப்புறம் இருக்கட்டும்...முதலில் நீ நல்லா பாடு.... டிவியில் நாலு பாட்டு பாடிவிட்டால் நீ எல்லாம் நல்ல பாடகனா?
டிவியில் கருத்துக்கு முக்கியத்துவம் கிடையாது. அவுங்களுக்கு ரேட்டிங்தான் முக்கியம். நாங்களும் நிறைய டிவி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளோம். அது எல்லாம் ரியாலிட்டி ஷோ கிடையாது. ரியல் எஸ்டேட் ஷோ. யாரை வெற்றி பெறச்செய்யவேண்டும் என்று முதலிலேயே முடிவு செய்து அதற்காக என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதை எல்லாம் செய்து அந்த நபரை வெற்றி பெறச்செய்கிறார்கள். இதில் எங்கே ரியல் இருக்கு?
தோப்பில் ஒரு தென்னைமரத்தில் கரையான் வந்திருந்தால் அது எல்லாம் தென்னைமரத்திற்கும் பரவிவிடும்’’ என்று தனது வருத்தத்தை ஆவேசத்துடன் பதிவு செய்திருந்தார் புஷ்பவனம் குப்புசாமி.
விஜய் டிவி மூலம் பிரபலமாகி, சின்ன மச்சான் பாடல் மூலம் திரையுலகிலும் பிரபலமாகியிருக்கும் செந்தில்கணேஷ் - ராஜலட்சுமி ஜோடியைத்தான் புஷ்பவனம் குப்புசாமி குறிப்பிட்டுச்சொல்லியிருக்கிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், யாரை குறிப்பிட்டுச்சொன்னேன் என்று அவர் மீண்டும் அளித்துள்ள ஆடியோ பேட்டி ஒன்றில்,
நாட்டுப்புறப்பாடலை தவறான பாதைக்கு அழைத்துச்செல்வோரை நான் கண்டிக்கிறேன். அவர்களுக்கு நான் அட்வைஸ் சொல்லவில்லை. நான் கண்டிக்கிறேன். பாடுறாத இருந்தா பண்பாட்டோட பாடுங்க. ஆடு.. இல்லேன்னா பாடு.... அது என்ன ஆடிக்கிட்டே பாட்டு....அப்படித்தான் ஆடுறியா அதை ஒழுங்காக ஆடுறியா... நான் செந்தில்கணேஷ் என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
பொதுவாக இப்படி செய்வோரை சொல்கிறேன். ஒழுங்காக பாடு அதுதான் பாடகருக்கான தகுதி. இரட்டை அர்த்தத்தில் பாடுவது மட்டும் பாடகர் இல்லை. அறைக்குள் நடைப்பதை எல்லாம் அரங்கேற்ற முடியுமா? எங்கே தெருமுனையில் இரவில் நடத்திய கூத்தை எல்லாம் டிவியில் கொண்டு வர்றான். நான் பாடுனது 25 பாட்டுன்னா...பாடமாட்டேன்னு சொன்னது 75 பாட்டு இருக்கும். தொப்புளுக்கும் அதுக்கும் ஒரு சாண் தூரம் அதுக்குத்தான் அலையுறான் எல்லாரும் என்ற பாட்டை பாடச்சொன்னபோது அந்த பேப்பரை கிழித்து அவன் மூஞ்சியிலேயே தூக்கி எறிந்துவிட்டு வந்தேன்.
‘குருவி குடைஞ்ச கொய்யாப்பழம்’ என்கிற பாடல் வார்த்தை ஆபாசமான அர்த்தம் தருவதை உணர்ந்து அதை தவிர்க்க நான் குருவி கொத்துன கொய்யாப்பழம் வேறு வார்த்தையைப் போட்டு பாடினேன். ஆனால் இளையராஜா விடாப்பிடியாக வற்புறுத்தி அந்த வார்த்தையைத்தான் பாட வேண்டும் என்றார். தங்கர்பச்சானும் அந்த வார்த்தைக்கு விளக்கம் கொடுத்தார். அதனால் அப்போது பாடிவிட்டேன். ஆனால், அதற்கு அது மாதிரி நான் பாடவும் இல்லை. அந்தப்பாடலை மேடையிலும் எங்கேயும் நான் பாடுவது இல்லை.
செந்தில்கணேஷ் - ராஜலட்சுமி செய்வதெல்லாம் கரகாட்டம். நாட்டுப்புறப்பாடல் கிடையாது. கரகாட்டம் மட்டுமல்ல தெருக்கூத்திலும் இப்போது இரட்டை அர்த்த வசனம், ஆபாசத்தை கொண்டு வந்துவிட்டார்கள். மக்கள் இசை என்ற பெயரில் மக்கள் கஷ்டப்பட்டு வளர்த்து வந்த அந்த கலையை குழி தோண்டி புதைத்துவிட்டார்கள். நாசமா போச்சு’’என்று கொந்தளித்துள்ளார்.