பொள்ளாச்சி பாலியல் வன்கொடூரக் குற்றவாளிகளைவிட, அதனை அம்பலப்படுத்திய நக்கீரனை விசாரிப்பதிலேயே சி.பி.சி.ஐ.டியைத் தொடர்ந்து சி.பி.ஐ.யும் வேகம் காட்டுகிறது. இது தொடர்பாக, நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவங்கள் தமிழகத்தையே அதிரவைத்த நிலையில், அதுதொடர்பாக நக்கீரன் தொடர்ந்து பல புதிய ஆதாரங்களை வெளியிட்டது. அவை தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியை உலுக்கின. உண்மைகளை அம்பலப்படுத்தின. எனினும், குற்றத்தில் தொடர்புடைய ஆளுந் தரப்பினரைக் காப்பாற்றும் முயற்சிகளையே மேலிடம் மேற்கொண்டது. இந்நிலையில், பொள்ளாச்சி காவல்நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட இரண்டு வழக்குகளையும் சி.பி.ஐ.க்கு மாற்றுவதாக தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்த ஆணைக்குப் பிறகும், அந்த வழக்குகளை சி.பி.சி.ஐ.டியே விசாரித்த நிலையில், கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகி, ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு ஆசிரியர் நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பி வந்தனர்.
சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் நக்கீரன் ஆசிரியர் ஆஜரானபோது...
இதனையடுத்து, ஆசிரியர் நக்கீரன்கோபால் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம், 'சென்னையில் இருக்கும் பத்திரிகை ஆசிரியரை கோவைக்கு அழைப்பதன் காரணம் என்ன? உண்மையிலேயே விசாரணை ஆவணங்கள் தேவைப்படும் பட்சத்தில் சென்னையிலேயே விசாரித்திருக்கலாமே?' என்று கூறி சென்னையில் 2019 ஏப்ரல்-1 ஆம் தேதி அவரை விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டிருந்தது.
ஏப்ரல் 1-ஆம் தேதி சென்னை எழும்பூரிலுள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜரானார் நக்கீரன் கோபால். எஸ்.பி. நிஷா பார்த்திபன் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீஸார், கிட்டத்தட்ட, 4 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை செய்து நெருக்கடியளித்தனர். நக்கீரனில் வெளியிடப்பட்ட செய்திகளில் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் தங்களின் விசாரணையைத் தொடர வேண்டிய போலீசார், நக்கீரனுக்கு செய்தி தந்தவர்களை அடையாளம் காட்டும்படி அச்சுறுத்தல் விசாரணை நடத்தினர். அனைத்துமே ஆளுந்தரப்பைக் காப்பாற்றும் வகையிலும், இனி பொள்ளாச்சி பற்றிய செய்திகளை வெளியிடக்கூடாது என்கிற மறைமுக மிரட்டல்களாகவுமே இருந்தன.
இந்நிலையில், இந்த வழக்கை தற்சமயம் கையிலெடுத்திருக்கும் சி.பி.ஐ., மே 8-ஆம் தேதி பெசன்ட் நகரிலுள்ள ராஜாஜி பவனில் அமைந்திருக்கும் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகுமாறும் பொள்ளாச்சி வழக்கோடு தொடர்புடைய அனைத்து ஆதாரங்களையும் கொண்டுவருமாறும் நக்கீரன் ஆசிரியருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
எத்தனை முறை விசாரணைக்கு அழைத்தாலும், பத்திரிகை ஆசிரியருக்குரிய பொறுப்புடன் அதனை எதிர்கொள்வதற்கு நக்கீரன் ஆசிரியர் தயாராகவே இருக்கிறார். எனினும், குற்றத்தின் பின்னணியில் உள்ள அதிகாரவர்க்கத்தினர் மீது எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், செய்தியை வெளியிட்டதே குற்றம் என்பது போன்ற விசாரணை கெடுபிடிகள், பத்திரிகை சுதந்திரத்திற்கும் அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்திற்கும் விடப்படும் சவாலாகும்.
ஊடகங்களுக்கு எதிரான எத்தனையோ சட்ட நெருக்கடிகளை எதிர்கொண்டு, அவற்றை நீதியின் துணையுடன் வெற்றிகண்டு ஊடக சாத்தியங்களுக்கு புதிய வாசல்களைத் திறந்துவைத்த நக்கீரன் இந்த விசாரணையையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளும்.