ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை தலைமையிடமாகக்கொண்ட பிஏசிஎல் நிறுவனம் இந்தியா முழுவதும் சாமானிய மக்களிடம் திரட்டிய டெபாசிட் தொகைக்கு இரட்டிப்பு வட்டியுடன் திரும்ப கொடுத்து வந்தது. நிறுவனம் தொடங்கப்பட்ட 30 ஆண்டுகள் இந்த முறை சரியாக இருந்தது. அதன்பின்னர் பணம் சரிவர வழங்காமல் போகவே வாடிக்கையாளர்கள் அளித்த புகாரின் பேரில் செபி (SEBI - Securities and Exchange Board of India) இதில் தலையிட்டு நிறுவனத்தை மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.
![p](http://image.nakkheeran.in/cdn/farfuture/q5O1WWNHc63hWCrOP8cMkP72rbOf9CEj6E88kd5tdH8/1564041422/sites/default/files/inline-images/pacl.jpg)
இந்தியா முழுவதும் 6 கோடி சாமானிய மக்களிடம் திரட்டிய சுமார் 70 ஆயிரம் கோடி முதலீட்டை திரும்பத்தராத நிலையில் அந்நிறுவனம் மூடப்பட்டது. இது தொடர்பான வழக்கில் நீதிபதி லோதா கமிட்டி விசாரித்தது. விசாரணையை அடுத்து பிஏசிஎல் நிறுவனத்திற்கு சொந்த சொத்துக்களை விற்று மக்களின் டெபாசிட் தொகையை திரும்ப தர உத்தரவிட்டது.
இதையடுத்து PACL நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களை விற்று உரியவர்களுக்கான தொகை திருப்பித்தருவதாக உறுதியளித்தது செபி. (இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் ) அதற்காக பணம் கட்டியதற்கான ஆதாரங்களை ஆன்லைனில் பதிவு செய்தால் உரியவர்களின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று சொன்னது. ஆன்லைனில் பதிவு செய்வதில் சில சிக்கல்கள் உள்ளதால் பலரும் பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும், ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு இன்னமும் வங்கிக்கணக்கில் பணம் வந்து சேரவில்லை. மக்களிடம் வசூலித்த 70 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட தொகை திரும்ப எப்போது கிடைக்கும் என்று உரிய பதிலும் இல்லை.
அதனால், இனியும் காலம் தாழ்த்தாமல் பணத்தை திரும்ப தர செபி முன்வர வேண்டும் என்றும், அதுவரை முற்றுகை போராட்டம் தொடரும் என்றும் போராட்டத்தில் சென்னை அண்ணா சாலையில் உள்ள செபி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் எங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.