உங்கள் சகோதரனாக கேட்கிறேன், தயவு செய்து கலைந்து செல்லுங்கள், தொண்டர்கள் கலைந்து சென்றால் தான் கலைஞரின் இறுதி ஊர்வலம் அமைதியான முறையில் நடக்கும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து, ராஜாஜி அரங்கில் கூடியிருந்த மக்கள் முன்னிலையில் பேசிய அவர்,
மெரினாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்க முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தபோது செவி சாய்க்கவில்லை. உயர்நீதிமன்றம் நமக்கு நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளது. திமுக தலைவர் கலைஞர் விட்டுக்கொடுக்காத போராளி.
திமுக தொண்டர்கள், பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும். ராஜாஜி அரங்குக்கு வந்தவர்கள் அமைதியாக திரும்பிச் செல்ல வேண்டும். அமைதியாக நீங்கள் கலைந்து சென்றால் தான் மாலை 4 மணிக்கு ஊர்வலம் நடைபெறும். இடஒதுக்கீடுக்காக போராடிய கலைஞர், மறைவுக்கு பிறகும் இடஒதுக்கீடுக்காக போராடி வெற்றி பெற்றுள்ளார். தொண்டர்கள் யாரும் தயவு செய்து கலவரத்துக்கு இடம் தர வேண்டாம். கலைஞரின் பிரிவு சோகத்தை ஏற்படுத்தி தந்தாலும், அவரது உணர்வை நிறைவேற்றி தந்திருக்கிறோம்.
உங்கள் சகோதரனாக கேட்கிறேன், தயவு செய்து கலைந்து செல்லுங்கள். கலைஞருக்கு அஞ்சலி செலுத்த சுவர் ஏறி வருவதை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும். தொண்டர்கள் கலைந்து சென்றால் தான் கலைஞர் இறுதி ஊர்வலம் அமைதியான முறையில் நடக்கும் என அவர் கூறினார்.