எஸ்.இ/எஸ்.டி. சட்டத்தின் மீது முன்னதாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
எஸ்.இ/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிற்கு கடந்த மார்ச் 20ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில், ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் அந்த சட்டத்தை நீர்த்துப் போகச்செய்யும் என சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நேற்று நாடு முழுவதும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தலித் அமைப்பினர் பந்த்தில் ஈடுபட்டனர். அது வன்முறையாக மாறியதில் 9பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, இன்று காலை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தது. அதை அவசர வழக்காக ஏற்று மதியம் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், ‘தீர்ப்பை சரியாக வாசிக்காதவர்கள் தான் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். நாங்கள் எஸ்.இ/எஸ்.டி வன்கொடுமை சட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்’ என தெரிவித்தனர். மேலும், இரண்டு நாட்களில் அனைத்து தரப்பினரும் மனுத்தாக்கல் செய்யவேண்டும் எனக்கூறியுள்ள நீதிபதிகள், வழக்கு விசாரணையை 10 நாட்களுக்குப் பின் நடைபெறும் என உத்தரவிட்டனர்.
எஸ்.இ/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் மூலம் குற்றம்சாட்டப்பட்டவர் மீது ஜாமீனில் வெளிவராதபடி வழக்குப்பதிவு செய்ய இயலும். ஆனால், கடந்த மார்ச் 20ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சம்மந்தப்பட்டவர்களிடம் தீர விசாரித்த பிறகுதான் வழக்குப்பதியவேண்டும். குறிப்பாக அரசு அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டால் நியமன அதிகாரியிடம் அனுமதி பெற்றபின்பே வழக்குப்பதிய வேண்டும். அரசு அதிகாரிகளாக இல்லாத பட்சத்தில் மாவட்ட காவல்துறை அதிகாரியின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.