
கோடை காலம் தொடங்கிய நிலையில் பல இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இருந்த போதிலும் அண்மையில் கடந்த 16 ஆம் தேதி சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் மழை பொழிந்திருந்தது.
இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி அரும்பாக்கம் பகுதியில் பள்ளி மாணவன் ஒருவன் மழை நீரில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது மின்சாரம் தாக்கி கீழே விழுந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி வைரலாகியது.
கடந்த 16ஆம் தேதி சென்னை அருகம்பாக்கம் பகுதியில் பெய்த மழையால் சாலையில் மழைநீர் தேங்கி இருந்தது. அப்பொழுது அருகம்பாக்கம் மாங்காளி நகர் பகுதியில் பள்ளி சிறுவன் ஒருவன் புத்தகப் பையுடன் சாலையில் தேங்கி இருந்த மழை நீரை கடந்து செல்ல முயன்றார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி மழைநீரில் சுருண்டு விழுந்தார். இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் இதனைப் பார்த்து பதறி அடித்துக்கொண்டு மாணவனை காப்பாற்ற முயன்றார். அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இருப்பினும் இருவரும் நூலிழையில் உயிர்தப்பினர். தற்பொழுது இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வைரலாகியது.

இந்நிலையில் சிறுவனை ஆபத்திலிருந்து உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞர் கண்ணனை அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளார். மேலும் அந்த இளைஞருக்கு தங்க மோதிரம் அணிவித்து தன்னுடைய வாழ்த்தையும் அவர் தெரிவித்துள்ளார்.