Skip to main content

“காங்கிரஸ் பா.ஜ.கவுக்கு உதவியிருக்கிறது” - மம்தா பானர்ஜி விமர்சனம்

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
 Mamata Banerjee critcized Congress Helped BJP in west bengal

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக நடைபெற்றது. அதன்படி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாகத் தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் 18வது ஜனநாயகத் திருவிழா தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று நேற்று முன்தினம் (01-06-24) 6 மணியுடன் முடிவடைந்தது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (04-06-24) எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதற்கிடையில், 543 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களை ஒவ்வொரு ஊடகங்களும் கடந்த 1ஆம் தேதி வெளியிட்டது. அதில், இந்தியாவில் உள்ள முக்கிய செய்தி நிறுவனங்கள் பா.ஜ.க 350க்கும் மேல் இடங்களை பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டது. அதே போல், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க அதிக இடங்களை கைப்பற்றும் என்று கூறியிருந்தன. இந்த கருத்துக்கணிப்புக்கு எதிர்க்கட்சிகள் பலர், கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதில், இந்த கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யானவை என்றும் இந்த தேர்தலில் 295 இடங்களை கைப்பற்றுவோம் என்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் கூறி வருகின்றனர். மேலும், 400 இடங்களை கைப்பற்றுவோம் என்று பா.ஜ.கவினர் கூறி வருகின்றனர். அதே நேரத்தில், நாளை எண்ணப்படும் வாக்கு எண்ணிக்கையில் யார் ஆட்சியைப் பிடிப்பது என்று மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு குறித்து விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “ இதுபோன்ற கருத்துக் கணிப்புகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. கடந்த 2016, 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எவ்வாறு நடத்தப்பட்டன என்பதை நாங்கள் பார்த்தோம். கணிப்புகள் எதுவும் உண்மையாகவில்லை. இந்த கருத்துக் கணிப்புகள் ஊடகங்களுக்காக சிலரால் இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டில் தயாரிக்கப்பட்டது. அவற்றுக்கு மதிப்பு இல்லை. மக்களவை பிளவுபடுத்துவதற்கு பா.ஜ.க முயற்சித்த விதம் மற்றும் இஸ்லாமியர்கள், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைப் பறிப்பதாக பொய்யான தகவலைப் பரப்பியது போன்றவற்றால் இஸ்லாமியர்கள் பா.ஜ.கவுக்கு வாக்களிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. 

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸும் பாஜகவுக்கு உதவியதாக நான் நினைக்கிறேன். இந்தியா கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்கு அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், மு.க.ஸ்டாலின் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டார்கள். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலையிடாத வரை அகில இந்திய அளவில் எந்தத் தடையும் இருக்காது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு மாநிலக் கட்சிக்கும் தனி மரியாதை உண்டு. எங்களை அழைத்தால் செல்வோம். மற்ற பிராந்தியக் கட்சிகளையும் அழைத்துச் செல்வோம். ஆனால் முதலில் தேர்தல் முடிவுகள் வெளியாகட்டும்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்