தலைநகர் டெல்லியில், நாளுக்கு நாள் காற்று மாசுப்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த காற்று மாசுபாட்டால், குழந்தைகளின் சுகாதார நலனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. காற்று மாசுப்பாட்டை தவிர்க்க டெல்லி அரசு பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறது. இருப்பினும், தீபாவளிக்குப் பிறகு டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
மோசமான காற்றின் தரத்திற்கு எதிராக தரப்படுத்தப்பட்ட செயல் திட்டத்தின் மூன்றாம் நிலையை ஏற்கெனவே ஒன்றிய காற்று மேலாண்மை ஆணையம் அமல்படுத்தியிருந்தது. அதன்படி, கட்டுமான இடிப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டு சுரங்கம், சாலை, போரிங், துளையிடும் பணிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. மேலும், ஐந்தாம் வகுப்பு வரை ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டது. நடைமுறையில் உள்ள நிலை 1, 2, 3 கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் நான்காம் நிலை அமலாகிறது.
டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசுப்பாடு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘டெல்லியில் நிலவும் காற்று மாசுப்பாடு மிகவும் கவலை அளிக்கிறது. . டெல்லியில் காற்று மாசுப்பாடு காரணமாக 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்த வேண்டும். இந்த காற்று மாசுப்பாடு அபாய கட்டத்தை எட்டிய நிலையில், நேரடி பள்ளி வகுப்புகள் நடத்தக் கூடாது. பயிர் கழிவு எரிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லி காற்று மாசு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை நவம்பர் 22ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்’ என்று கூறி, இந்த வழக்கை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.