நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தொடர், வரும் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தொடரில், அதானி மீதான குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு இரு அவைகளிலும் அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் பாகுபாடற்ற முறையில் செயல்படுவதாகக் கூறி மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். இது தொடர்பாக மாநிலங்களவையில் நடைபெற்று விவாதத்தின் போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, துணை குடியரசுத் தலைவரான ஜக்தீப் தன்கரை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்த விவாதத்தில் பேசிய ஜக்தீப் தன்கர், “ 24 மணி நேரமும் எனக்கு எதிராக எதிர்க்கட்சி பிரச்சாரம் செய்கிறது. இது எனக்கு எதிரான பிரச்சாரம் அல்ல, நான் சேர்ந்த சமூகத்திற்கு எதிரான பிரச்சாரம். நான் ஒரு விவசாயியின் மகன். நான் பலவீனம் ஆகமாட்டேன். என் நாட்டிற்காக என் உயிரைத் தியாகம் செய்வேன். நான் நிறைய பொறுத்துக்கொண்டு வருகிறேன். இந்த தீர்மானத்தை கொண்டுவர உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் நீங்கள் அரசியலமைப்பை அவமதிக்கிறீர்கள்” என்று கூறினார்.
இதனையடுத்து எழுந்த கார்கே, “நீங்கள் விவசாயி மகன் என்றால், நான் தொழிலாளியின் மகன். உங்களுடைய பெருமையை கேட்பதற்கு நாங்கள் இங்கு அமர்ந்திருக்கவில்லை. நான் உங்களை விட அதிக சவால்களை சந்தித்து வருகிறேன். நீங்கள் எங்களது கட்சித் தலைவர்களை அவமதிக்கிறீர்கள், நீங்கள் காங்கிரஸ் கட்சியை அவமதிக்கிறீர்கள். நாங்கள் உங்கள் புகழைக் கேட்க இங்கு வரவில்லை, நாங்கள் விவாதத்திற்காக இங்கு வந்துள்ளோம்” என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஜக்தீப் தன்கர் கூறியதாவது, “நீங்கள் யாருடைய புகழ்ச்சியை விரும்புகிறீர்கள் என்று உலகம் முழுவதும் தெரியும்” என்று கூறினார்.
இதில் கோபமடைந்த கார்கே, “மாநிலங்களவைத் தலைவர் பா.ஜ.க.வின் ஒழுங்கீனத்தை ஊக்குவிக்கிறார். காங்கிரஸை விமர்சிக்க பா.ஜ.க உறுப்பினர்களுக்கு நேரம் கொடுக்கப்படுகிறது. ஆனால், அதற்கு பதில் அளிக்க எங்களுக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கப்படுவதில்லை. எதிர்க்கட்சிகளை பேச விடுவதில்லை. நீங்கள என்னை அவமதிக்கிறீர்கள், அப்படி இருக்கும்போது நான் எப்படி உங்களை மதிக்க முடியும்?” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே அவையை வரும் 16ஆம் தேதி வரை ஒத்திவைப்பதாக மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.