இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது தமிழக அரசு. குறிப்பாக பள்ளிகளிலும் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. மேலும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அனைத்து மாவட்ட மருத்துவர்களிடம் ஆலோசனை செய்தார்.
இந்நிலையில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. மார்ச்- 31 ஆம் தேதி வரை பள்ளிகளில் ஆசிரியர்கள் பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவு செய்ய வேண்டாம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.