சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு தன் வீட்டில் இருந்தபடியே ஒரு வீடியோ பதிவு வெளியிட்டு, நான் வீட்டில் இருக்கிறேன். நீங்களும் பாதுகாப்பாக வீட்டில் இருங்கள். ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் வாட்ஸ் அப், அல்லது போனில் தொடர்பு கொண்டு சொன்னால் அந்த உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கிறேன். மேலும் வெளிமாநிலங்களில் யாரேனும் வரமுடியாமல் தவித்தாலோ, உணவுக்காக சிரமப்பட்டாலோ அவர்கள் பற்றிய தகவல் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த வீடியோ பதிவு வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் தான் இன்று சிவகங்கை தொகுதியில் உள்ள ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் ஆலங்குடி, வடகாடு, கீரமங்கலம் ஆகிய ஊர்களில் தூய்மைப் பணியாளர்களுக்க 5 கிலோ அரிசியை நிவாரணமாக வழங்கிய பிறகு உங்களுக்காகத் தேவைகள் இருந்தால் தயங்காமல் சொல்லுங்கள் செய்கிறேன். வீட்டில் உங்கள் குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னவர். தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசினார்.
அப்போது, மதுவிலக்குப் பிரச்சனையில் மற்ற அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துகளுடன் நான் மாறுபட்டு நிற்கிறேன். என்னைப் பொறுத்தவரை தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை. அந்தக் கொள்கையும் வெற்றி பெறாது. அமெரிக்காவில் 1930 இல் பூரண மதுவிலக்கு கொண்டு வந்த போது மாபியாக்கள் ஆல்ககால் விற்கத் தொடங்கினார்கள்.
அதே போல இன்றைக்கும் சவுதி அரேபியாவில் ஈரானில் பூரண மதுவிலக்கு சட்டப்படி உள்ளது. ஆனால் அங்கேயேயும் அமல்படுத்த முடியவில்லை. இந்தியாவில் குஜராத்தில் மதுவிலக்கு எனச் சொல்கிறார்கள் ஆனால் காந்தி பிறந்த போர்பந்தரில் தான் அதிக அளவில் மாஃபியாக்கள் இருக்கிறார்கள். மதுவிலக்கு என்றாலே உடனடியாக ஆல்கஹால் மாஃபியாக்கள் அங்கே வந்துவிடுகிறார்கள். கள்ளச்சாராயம் உள்ளே வந்துவிடும்.
புதுக்கோட்டை மாவட்டத்திலேயே சேவிங் லோசனை குடித்து 3 பேர் இறந்துள்ளனர். மதுவால் பல கேடுகள் உள்ளது என்பதை நன்கு அறிவேன். மது அருந்தக் கூடாது என்ற வாதத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். 45 நாட்களாக மதுக்கடைகளைத் திறக்காமல் ஒரே நாளில் கடையைத் திறந்ததால் தான் இ்வ்வளவு கூட்டம் வந்தது. அதற்கு மாறாக நாள்தோறும் இரண்டு மணி நேரம் மதுக்கடைகளைத் திறந்து இருந்தாலே ஒரே நாளில் மதுபானப் பாட்டில்களை வாங்கக் கூட்டம் குவிந்து இருக்காது. தமிழக அரசு ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்து இருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது. மதுக்கடைகளை முற்றிலுமாக மூடியதால் தான் மாற்று போதை தேடி மக்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கோயில் பள்ளிக் கூடங்களுக்கு அருகில் கடைகளை வைக்காமல் மாற்று இடங்களில் கடைகளை வைத்து 2 மணி நேரம் விற்பனை செய்வதுடன் ஆன்லைன் மது விற்பனை செய்யலாம். தமிழக அரசு மேல்முறையீடு என்பது எந்த அடிப்படையில் நீதிமன்றம் போய் இருக்கிறார்கள் எனத் தெரியாது.
காமராஜர் வழிவந்த நீங்கள் மதுவிலக்கு சாத்தியமில்லை என்று சொல்வது?
அதைத்தான் சொல்கிறோன். நான் மாறுபட்டு இருக்கிறேன். பிராக்டிக்கலாக இருக்கிறேன். யதார்த்தத்தைச் சொல்ல கூச்சப்பட்டதில்லை. தமிழக அரசு ஊரடங்கை முறையாகச் செய்யவில்லை. அதனால் தான் கோயம்பேட்டில் போய்க் குவிந்து நோய்த் தொற்று அதிகரித்துள்ளது. தமிழக அரசால் பொதுமக்கள் நிறைய பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு ரூபாய் 7 ஆயிரம் உதவித் தொகை கொடுக்க வேண்டும். இதே போல இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு முன் எச்சரிக்கையாக அனுப்பாமல் வேலையும் கொடுக்காமல் உணவின்றி தவித்து 1,000 கி.மீ வரை நடந்து சென்றுள்ளனர். மனிதநேயமே இல்லாம் மத்திய, மாநில அரசுகள் செயல்படுகிறது.
டாஸ்மாக் கடைகள் திறப்பு குறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருக்கிறாரே?
அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துகளுத்தான் நான் பதில் சொல்லமுடியும்.
வைரசுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்ற மத்திய அரசின் பேச்சு?
வைரஸ் என்பது அனைவரின் உடலிலும் இருக்கும். சளி கூட ஒரு வைரஸ் தான். இது எல்லா காலத்திலும் உள்ளது. இப்போது வீரியமாக உள்ள வைரஸ் பிறகு வலுவிழந்துவிடும். அதனால் வல்லுநர்களின் கருத்துகள் அடிப்படையில் அப்படிச் சொல்லி இருக்கலாம். அது தவறு என்று சொல்லமாட்டேன்.