தமிழக அரசியலில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் எனக் கருதப்பட்ட சசிகலா தற்போது அரசியலை விட்டே ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தமிழகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கப் போவதாக இன்று வெளியான (03.03.2021) நக்கீரன் இதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம். 'ராங்-கால்' பகுதியில் வெளியான செய்தியை அப்படியே உங்களுக்குத் தருகிறோம்.
ரஜினி பாணியில் சசிகலாவும் அரசியல் துறவுங்குற மனநிலைக்கு வந்துட்டாருன்னு அவர் தரப்பில் இருந்தே செய்திகள் வெளியானது. "என்னப்பா இது? சிறையில் இருந்து விடுதலையாவதற்கு முன்பே, அவர் வெளியே வந்து தமிழக அரசியலையே புரட்டிப் போடப் போறாருன்னு அவர் தரப்பைச் சேர்ந்தவர்களே சொன்னார்களே என்று விசாரித்தோம்.
"அவங்க மட்டுமில்லை. இங்க இருக்கும் பெரும்பாலான ஊடகங்களும் பிரமாண்டமான பில்டப்பை அவருக்குக் கொடுத்துச்சு. அதேபோல், அவர் ரிலீசாகி பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்தப்ப, வழிநெடுக, ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்களால் அவர் அமர்க்களமா வரவேற்கப்பட்டார். இருந்தும் சசிகலாவை, கட்சித் தொண்டர்களோ, அதிமுகவின் முக்கிய வி.ஐ.பி.க்களோ போய்ச் சந்திக்கவே இல்லை. இதில், அவர் திகைத்துப் போயிருந்த நிலையில்தான், 25-ந் தேதி அமமுக பொதுக்குழுன்னு ஒரு கூடத்தைக் கூட்டினார் தினகரன். தங்கள் அணியின் முதல்வர் வேட்பாளர் தான் தான்னு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, சசிகலாவுக்கு ஹைவோல்ட் அதிர்ச்சி கொடுத்தார். இதனால், அப்செட்டான சசிகலா, தன் மன்னார்குடி சொந்தங்களிடம்... 'என்னால் அதிமுக கொடி போட்ட காரிலும் வெளியில் போக முடியவில்லை. அமமுக கொடி போட்ட காரிலும் வெளியே தலைகாட்ட விரும்பவில்லை. இனி அரசியலே வேணாம்ங்கிற முடிவுக்கு நான் வந்துட்டேன்'னு கலக்கமா சொல்லியிருக்கார்" என தெரிவித்தனர். இந்த நிலையில்தான், இன்று (03.03.2021) மாலை அரசியலை விட்டு விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார் சசிகலா.