தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தல் தேதியை விரைவில் அறிவிக்கவிருக்கிறது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம். அதற்குத் தோதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் சென்னைக்கு வந்திருந்த தேர்தல் அதிகாரிகள் குழு, தமிழக உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.
அதில், தமிழக அதிகாரிகளுக்குப் பல அறிவுறுத்தல்கள் கூறியதுடன், சட்டம் - ஒழுங்கு தொடர்பாக கடுமை காட்டினார் சுனில் அரோரா! குறிப்பாக, உயரதிகாரிகள் மீது கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து, மாவட்ட அளவில் நடக்கும் குற்றங்கள் தொடர்பாக ஏற்கனவே வந்துள்ள புகார்களை அலசியது மாநில உள்துறை. அதன்படி, காவல்துறை அதிகாரிகள் 54 பேரை இடமாற்றம் செய்து நேற்று (17.02.2021) உத்தரவிட்டது எடப்பாடி பழனிசாமி அரசு.
இந்த நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவுக்கு இணையாக 2 இணை தேர்தல் அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்தனர். அதன்படி, வேளாண்துறை இணைச்செயலாளர் ஆனந்த் ஐ.ஏ.எஸ். மற்றும் சுகாதாரத்துறை கூடுதல் ஆணையர் அஜய் யாதவ் ஐ.ஏ.எஸ். ஆகிய 2 அதிகாரிகளை இணைத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக தற்போது நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.