இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே சுமார் இரண்டு மாத காலமாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.
தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது. இரு தரப்பிற்கும் இடையிலான இந்தப் போரில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன.
அதனைத்தொடர்ந்து ஹமாஸ் அமைப்புடன் 4 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் செய்துகொள்ள இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. அதன்படி இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் கடந்த 24 ஆம் தேதி (24-11-23) முதல் அமலுக்கு வந்தது. மேலும் இருதரப்பினரும் தங்களிடம் இருந்த பிணைக் கைதிகளை விடுதலை செய்து வந்தனர். அதே சமயம் இந்த போர் நிறுத்தம் இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் எகிப்து, கத்தார், அமெரிக்கா ஆகிய நாடுகள் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கத்தார் நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.