
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதியான, பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை, அவரது பிறந்தநாளான இன்று தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக மாலை சுமார் 5 மணியளவில் விமானம் மூலம் சென்னைக்கு வரவுள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளிக்கின்றனர்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மெரினா கடற்கரையில் உள்ள ஐ.என்.எஸ். விமானப்படைத்தளத்திற்கு அவர் செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் கலைவாணர் அரங்கம் சென்று, மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். விழா முடிந்ததும் ஆளுநர் மாளிகையில் இன்றிரவு பிரதமர் தங்குகிறார்.
பின்னர் நாளை காலை விமானம் மூலம் புதுச்சேரி செல்லும் அவர், காலை 10.30 மணிக்கு அன்னை அரவிந்தர் ஆசிரமத்தில் நடைபெறும் வழிபாட்டு விழாவில் பங்கேற்கிறார். பகல் 12 மணிக்கு ஆரோவில் சர்வதேச நகர் பொன்விழாவில் மோடி கலந்து கொள்கிறார். அதனையடுத்து புதுச்சேரி விமானநிலைய மைதானத்தில் நடைபெறும் பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றுப் பேசுகிறார். பின்னர் மாலை 4 மணிக்கு புதுச்சேரியிலிருந்து விமானம் மூலம் குஜராத் செல்கிறார்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னை மற்றும் புதுச்சேரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையம், கலைவாணர் அரங்கம் மற்றும் ஆளுநர் மாளிகை ஆகிய இடங்களை தில்லியிருந்து வந்துள்ள சிறப்புப் பாதுகாப்பு படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து முழுமையாக கண்காணித்து வருகின்றனர். பிரதமர் செல்லும் இடங்களில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.