தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான எச்.வசந்தகுமார் சென்னையில் காலமானார்.
இதுதொடர்பாக மருத்துவமனை முன்பு செய்தியாளர்களை சந்தித்த எச்.வசந்தகுமார் மகன் விஜய்வசந்த், என்ன சொல்வது என்று வார்த்தைகள் இல்லை. அப்பா இன்று (28.08.2020) 6.56 மணிக்கு இயற்கை எய்தினார். கோவிட் டெஸ்ட் எடுத்து பின்னர் சிகிச்சை எடுத்து கொண்டிருந்தார். வெண்டிலேட்டர் வைக்கக்கூடிய சூழ்நிலை வந்தது. கரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு மூச்சுவிட ஆரம்பிக்கும்போது பாக்டீரியா இன்பெக்ஷன் ஆனது. மீண்டும் சிகிச்சை கொடுக்க வேண்டிய நிலை வந்தது. மருத்துவர்கள் போராடியும் அப்பாவை காப்பாற்ற முடியவில்லை.
அப்பாவிற்கு இரண்டாவது முறை எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தது, கரோனாவால் அப்பா இறக்கவில்லை. அப்பா நலம் பெற வேண்டும் என்று நினைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள் குடும்பத்திற்கு மட்டும் இழப்பு என்று சொல்லிக்கொள்ள முடியாது. அப்பா மீது மரியாதை வைத்திருந்த அனைவருக்கும் மிகப்பெரிய இழப்பு என்றார்.
கரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னர்தான் வசந்தகுமார் உடல் பாதுகாப்பு உடைகள் அணிவிக்கப்பட்டு, கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வேன் மூலம் தி.நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அவரது நிறுவன ஊழியர்கள், தி.நகர் வியாபாரிகள், தொழிலாளர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினார். இதற்கு பின்னர் 10 மணி அளவில் அவரது உடல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்: அசோக்குமார், குமரேஷ்