முதல்வர் வேட்பாளர் யார் என்கிற பஞ்சாயத்தை நாளைக்குள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அதிமுகவின் சீனியர்கள் போராடி வருகின்றனர். முதல்வர் வேட்பாளர் பதவியை எந்த சூழலிலும் விட்டுத்தர மறுத்து வருகிறார் எடப்பாடி. அவருக்கு எதிராக போக்கொடி உயர்த்தியுள்ள ஓபிஎஸ், கட்சிக்கு வழிகாட்டும் குழுவை அமையுங்கள்; அதன் பிறகு முதல்வர் வேட்பாளரை முடிவு செய்து கொள்ளலாம் என்று அடம் பிடிக்கிறார்.
இதனால் இபிஎஸ்-ஓபிஎஸ் அதிகார போட்டி வலுத்த நிலையில் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சியின் சீனியர்கள் இறங்கினர். எடப்பாடியிடம் பேசிய அமைச்சர்கள் அனைவரும், முதல்வர் வேட்பாளர் நீங்கள் தான். இந்த விசயத்தில் கட்சியின் பெரும்பான்மை ஆதரவு உங்களுக்குத்தான் இருக்கிறது. ஆனால், வழிகாட்டும் குழு அமைக்க வேண்டும் என்கிற ஓபிஎஸ்சின் கருத்து தவறானதல்ல! அப்படி ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்பதற்கும் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்று எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
எடப்பாடியை சந்தித்த கே.பி.முனுசாமி மற்றும் வைத்தியலிங்கமும் இதே கருத்தினை வலியுறுத்தி சமாதானம் செய்துள்ளனர். மேலும், எடப்பாடியை சந்திக்கும் சீனியர் அமைச்சர்கள், வழிகாட்டும் குழுவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை எனில் அதுவே ஓபிஎஸ்சை வலிமையாக்கும். இது தேர்தல் நேரம். வாய்ப்பு கிடைக்காது என நினைப்பவர்கள், ஏற்கனவே பதவி இழந்தவர்கள் , கட்சியில் ஓரங்கட்டப்பட்டவர்கள் என பலரும் ஓபிஎஸ் பின்னால் செல்லும் சூழல் உருவானால் அது உங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்துவதை விட அதிமுகவை பலகீனப்படுத்தும். அதுவே திமுகவுக்கு சாதகமாகலாம். அதனால் சமாதானத்துக்கு ஒப்புக்கொள்ளுங்கள் என மனம் திறந்து பேசியிருக்கிறார்கள்.
இப்படி சமாதானம் பேசுவதற்கு காரணம், முதல்வர் வேட்பாளர் எடப்பாடி என்பதில் மாற்று கருத்து இல்லை; அதே சமயம் அவரிடம் மட்டுமே மொத்த அதிகாரமும் குவிவதை சீனியர்கள் விரும்பவில்லை என்பதுதான்.
இந்த நிலையில் இரு தரப்பிலும் நடந்த பேச்சுவார்த்தையில், முதல்வர் வேட்பாளராக எடப்பாடியும்; வழிகாட்டும் குழுவின் தலைவராக ஓபிஎஸ்சும் தேர்வு செய்யலாம் என்கிற ஒரு ஃபார்முலாவை இருவரிடமும் முன் வைத்துள்ளனர். அந்த ஃபார்முலாவுக்கு ஆதரவு அதிகம் உள்ளது. இதனை ஓபிஎஸ் ஏற்றுக் கொள்ளும் நிலையில், எடப்பாடி முரண்டு பிடிக்கிறார். இருப்பினும் அவரை ஒப்புக்கொள்ள வைக்கும் முயற்சிகள் இன்று காலை வரை நடந்துள்ளது.