Skip to main content

கவலையுடன் பேசிய கே.எஸ். அழகிரி... நம்பிக்கை கொடுத்த வீரப்ப மொய்லி..!

Published on 05/03/2021 | Edited on 05/03/2021

 

ddd

 

திமுக கூட்டணியில் முக்கியக் கட்சியாக இருக்கும் காங்கிரசுக்கும், அக்கட்சி எதிர்பார்க்கும் எண்ணிக்கையில் சீட் ஒதுக்க அறிவாலயம் மறுத்துவிட்டது. அதேசமயம், ’’பேச்சுவார்த்தை சுமுகமாக இருக்கிறது” என சொல்லி வந்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “பந்து திமுகவிடம் இருக்கிறது. இனி அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” எனப் பேட்டியளித்தார். 

 

இதற்கிடையே, காங்கிரசுக்கு கொடுக்கப்படுவதாக திமுக சொல்லும் சீட் எண்ணிக்கை மற்றும் தொகுதிகள் குறித்து விவாதிப்பதற்காக கட்சியின் மூத்த தலைவர்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டியுள்ளது காங்கிரஸ். 

 

ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கலந்துகொண்டார். அப்போது அவர், ‘திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் உங்கள் கருத்து என்ன’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, அங்கிருந்தவர்கள் கூட்டணி வேண்டாம் என்று சத்தமாக கூறியுள்ளனர்.

 

அப்போது பேசிய மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, “இங்குள்ள எழுச்சியைப் பார்த்தால் எம்எல்ஏ சீட்டு கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்கள் அமைதியாக உட்கார்ந்திருக்கின்றனர். மற்றவர்கள் எல்லாம் வேண்டாம் என்று சொல்கிறீர்கள். இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு 60 சீட் கிடைத்தது, பின்னர் 40 சீட் கிடைத்தது, இப்போது அதையும் குறைக்கும் விதமாகப் பேசுகிறார்கள். இப்படியே போனால் எதிர்காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போய்விடுமோ என்கிற பயம் இருக்கிறது” என்று ஆதங்கப்பட்டுள்ளார்.

 

தொடர்ந்து பேசிய வீரப்ப மொய்லி, “திமுகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்து, கடந்த ஒருமாத காலமாகவே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பேச்சுவார்த்தை நடந்தும் சுமூகமான முடிவு ஏற்படவில்லை என்பது வருத்தமாக உள்ளது. இருந்தாலும் கௌரவமான சீட்டுக்களை நாம் கேட்டுப் பெறுவோம்” என்று காங்கிரஸ் கட்சியினருக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்