புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி என்ற கிராமத்தில் பெரியார் சிலையை உடைத்த பாதுகாப்புப்படை வீரர் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளன.
புதுக்கோட்டை விடுதி என்பது மிகச்சிறிய கிராமம்தான். ஆனால், இந்தக் கிராமத்தில் பெரியாரைப் பின்பற்றும் குடும்பங்கள் அதிகம். இதற்கு காரணம் பெர.ராவணன். இவர் திராவிடர் கழகத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளராக இருந்தவர். இவர்தான் தந்தை பெரியார் சிலையையும் இந்தக் கிராமத்தில் அமைத்திருக்கிறார். ஆதிதிராவிடர்களை அதிகமாகக்கொண்ட இந்தக் கிராமத்தில் சாதிப்பாகுபாடே கிடையாது என்கிறார்கள்.
இந்தக் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமாரும் பெரியார் மீது பற்றுக்கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். இவரை இவருடைய குடும்பத்தினருக்கே பிடிக்காமல்தான் இருந்திருக்கிறது. முரட்டுத்தனமாக திரிந்த இவர் தந்தையிடம் அடிவாங்கும் அளவுக்கு மோசமான நடத்தைகளைக் கொண்டிருந்தார்.
எனவேதான், ராணுவத்தில் சேரும் நிலை ஏற்பட்டது. மத்திய பாதுகாப்புப் படையில் சேர்ந்த செந்தில்குமார், அங்கு பா.ஜ.க. ஆதரவு குழுவில் சேர்ந்திருக்கிறார். வீட்டிற்கு வரும்போதெல்லாம் பெற்றோருடன் தகராறு நடப்பது வாடிக்கையாக இருந்திருக்கிறது. பாதுகாப்புப் படையில் காவிக் கும்பலில் இணைந்ததால் வந்த வினைதான் பெரியார் சிலை உடைப்பு என்கிறார்கள் இவரைப் பற்றி தெரிந்தவர்கள்.
இப்போது, சிலை உடைப்பில் கைதாகி இருக்கும் செந்தில்குமாரின் வேலைக்கு ஆபத்து இருக்குமா என்பது தெரியவில்லை.