2021 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு கொடுக்கப்படுவதாக திமுக சொல்லும் சீட் எண்ணிக்கை மற்றும் தொகுதிகள் குறித்து விவாதிப்பதற்காக கட்சியின் மூத்த தலைவர்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தை அவசரமாக இன்று கூட்டியுள்ளது காங்கிரஸ். இது குறித்து விவாதிப்பதற்காக காங்கிரசின் மேலிட தலைவர்களான கே.சி.வேணுகோபால், திக்விஜய்சிங் இருவரையும் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார் ராகுல்காந்தி.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் குறைவான சீட்டுகள் ஒதுக்குவதாகச் சொல்லும் திமுக கூட்டணிக்குள் நீடிக்கலாமா? வேண்டாமா? அதிக சீட்டுகள் கேட்டு வலியுறுத்தலாமா? வேண்டாமா? என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு கதர் சட்டையினரின் கருத்துக்களைக் கேட்டு முடிவு செய்யவிருக்கிறது சத்தியமூர்த்திபவன்.
இந்த ஆலோனைக்குப் பிறகு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் சம்பந்தியுமான பூண்டி கிருஷ்ணசாமி வாண்டையார் பேசுகையில், “திமுக கூட்டணியில் எவ்வளவு சீட்டு கேட்கலாம் எனக் கேட்டார்கள். அதற்கு எங்களுடைய ஒட்டுமொத்தக் கருத்தும், காங்கிரசுக்கு ஒரு மரியாதையான எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்க வேண்டும். அதில்தான் சில முரண்பாடுகள் இருக்கிறது. கேட்கும் இடங்கள் கொடுக்கவில்லை என்றால் என்ன செய்யலாம் என மேலிடத்தில் கேட்டார்கள். தனித்து நிற்கலாம், அல்லது வேறு கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம் எனக் கூறியுள்ளோம். அதேபோல் திமுகவிடம் கேட்கும் உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டாம் என்பதுதான் எங்களுடைய கருத்து. ஆனால் எல்லாம் மேலிடம்தான் முடிவு செய்யும்” என்றார்.
ஆலோசனையில் கலந்துகொண்ட சிலர், அமமுக மற்றும் சில கட்சிகளுடன் சேர்ந்து களம் காணலாம் என்றும் தெரிவித்திருப்பதாக சத்தியமூர்த்தி பவனில் உள்ள கதர் சட்டையினர் தெரிவிக்கின்னர்.