சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், வருவாய் ஆவணங்களில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களை 8 வாரத்தில் பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும். மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே எட்டுவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்து, சேலம் -சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டனர். சென்னை -சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு புதிய அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து நில உரிமையாளர்கள், பூ உலகின் நண்பர்கள், விவசாயிகள், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் , பவானி சுப்பராயன் விசாரணை நடத்தி வந்தனர். வழக்கின் இறுதி விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெற்றது. அனைத்து தரப்பிலும் இறுதி வாதங்கள் அன்று முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். மேலும், ஜனவரி 4ஆம் தேதிக்குள் எழுத்துபூர்வ வாதங்களை அனைத்து தரப்பிலும் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று காலை தீர்ப்பளித்துள்ளனர்.