பொதுவாக, காவல்துறை வழக்கு பதிவு செய்யும் நடைமுறைகள் சற்று எசகுபிசகாகவே இருக்கும். இதனை ‘எழுதப்படாத விதி’ என்று சொல்கிறார்கள் வழக்கறிஞர்கள் வட்டாரத்தில். உதாரணத்துக்கு, சிவகாசியில் இன்று கைதான ‘சிலோன் ராஜா’ மீதான வழக்கு.
![d](http://image.nakkheeran.in/cdn/farfuture/TJEQzowUffMpqa7xGW997SRq7sQbiioWvJHYhudbSTw/1562350949/sites/default/files/inline-images/drugs%20man%20police%20catch.jpg)
சிலோன் ராஜா என்பவன் கஞ்சா விற்பனை செய்யும் பேர்வழி. 1050 கிராம் கஞ்சா வைத்திருந்தபோது பிடிபட்டதாக இவன் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது சிவகாசி நகர் காவல்நிலையம். எப்படி தெரியுமா? ரகசிய தகவலாளி சொன்ன தகவலைப் பெற்று, கஞ்சா தடுப்பு சம்பந்தமாக ரோந்து சுற்றி வரும்போது, கையில் வெள்ளைநிற நைலான் பையுடன் இருந்த சிலோன் ராஜா, போலீசாரைப் பார்த்ததும் ஓடினானாம். அவனைப் பிடித்ததும், ‘உம்மிடம் கஞ்சா என்னும் போதைப் பொருள் உள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஆதலால், உம்மை சோதனை செய்ய வேண்டும்.
அதற்கு நீர் கனம் குற்றவியல் நீதித்துறை நடுவர் அவர்களிடமோ, அல்லது அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி முன்போ, அழைத்துச்செல்ல வேண்டும் என்று சொல்லுவதற்கு உமக்கு உரிமை உண்டு. அவ்வாறு உம்மை அழைத்துச் செல்லவா? என்று கேட்டதற்கு, ‘தேவையில்லை. போலீஸ் பார்ட்டியாகிய தாங்களே சோதனை செய்யலாம்.’ என்று சொன்னானாம். உடனே, போலீசார் அவன் வைத்திருந்த வெள்ளை நிற நைலான் பையை வாங்கி நுகர்ந்து பார்க்க கஞ்சா வாடை அடித்ததாம். தராசில் எடை போட்டதில், சரியாக 1050 கிராம் கஞ்சா இருந்ததாகவும், அதில், 50 கிராம் கஞ்சாவை தனியாகவும், 1000 கிராம் கஞ்சாவைத் தனியாகவும் பொட்டலம் போட்டு, இரண்டுக்கும் தனித்தனியாக சீல் வைத்தனராம்.
![k](http://image.nakkheeran.in/cdn/farfuture/DmClpqexb6bZ2kNGN8dTGWUgAcWK2kNPm3uh_Kj8LvY/1562351043/sites/default/files/inline-images/kanja%20man.jpg)
NDPS (The Narcotic drugs and Psychotropic Substances Act) எனப்படும் போதை மருந்துகள் மற்றும் உளச்சார்புள்ள பொருட்கள் சட்டத்தின் கீழ் மேற்கண்டவாறுதான் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. கஞ்சா வைத்திருக்கும் நபர், ‘போலீஸே என்னை சோதனை செய்யலாம்’ என்று கூறியதாக வழக்கு பதிவு செய்வது, சட்டத்தின் பார்வையில் வேண்டுமானால் சரியாக இருக்கலாம். சராசரி மனிதனின் பார்வையில் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்கு எப்படி பதிவாகிறது தெரியுமா? என்று விபரத்தைச் சொன்னார் ஒரு வழக்கறிஞர். குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்களை நிறுத்தி, ஊதச் சொல்லி சோதனை செய்து, அவர் மது அருந்தியிருக்கிறார் என்பதை அறிந்துகொண்டு, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள் காவல்துறையினர். அந்த நபர் மது அருந்தியிருக்கிறார் என்று மருத்துவர் சான்று வழங்குவதற்கு முன், மருத்துவ ரீதியாக சோதனை நடத்துவதற்கான வசதி பல அரசு மருத்துவமனைகளிலும் கிடையாது. ஆனாலும், காவல்துறையினர் அழைத்துவரும் நபரை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தாமல், ‘குடிபோதையில் இருக்கிறார்’ என்று அரசு மருத்துவர் சான்று வழங்குவதுதான் பெரும்பாலான வழக்குகளில் நடக்கிறது. இந்த நடைமுறையை, ‘காவல்துறைக்கும் அரசு மருத்துவருக்குமான அண்டர்ஸ்டேண்டிங்’ என்கிறார்கள்.
சட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லாததாலும், ஒருவேளை சட்டத்தை அறிந்திருந்தாலும், ‘நான் கஞ்சா விற்றது உண்மைதானே? குடிபோதையில் வாகனத்தை நான் ஓட்டத்தானே செய்தேன்?’ என்று குற்றத்தை ஒப்புக்கொள்ளும் மனநிலையில் பலரும் இருப்பதாலும், இதுபோன்ற போலீஸ் நடைமுறைகள் காலம் காலமாகத் தொடர்ந்தபடியே உள்ளன.