
டெல்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், 48 இடங்களை கைப்பற்றி பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி, வெறும் 22 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷி சிசோடியா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்த தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர். இதனால், அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்பார் என்ற தகவல் வெளியானது.
இதற்கிடையில், டெல்லி தேர்தல் தோல்வி பஞ்சாப் மாநிலத்திலும் எதிரொலித்துள்ளது. 117 இடங்கள் கொண்ட பஞ்சாப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், 92 இடங்கள் கைப்பற்றி ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்தது. அதன்படி, அங்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் பகவந்த் மான் முதல்வராக ஆட்சி நடத்தி வருகிறார். தற்போது டெல்லி தோல்விக்குப் பிறகு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் பலர் காங்கிரஸ் கட்சிக்கு தாவ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகின.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா கூறுகையில், “டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்த பிறகு, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இடையே உள்கட்சிப் போராட்டம் தொடங்கும். மேலும், 30க்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் காங்கிரஸுடன் தொடர்பில் இருக்கின்றனர். அவர்கள் கட்சி மாறத் தயாராகவும் இருக்கின்றனர்” என்று கூறினார். ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் காங்கிரஸுடன் தொடர்பில் இருப்பதாக வெளியான தகவலால், ஆம் ஆத்மி தலைமைக்கு பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது. இதற்கிடையே, பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானுக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், நேற்று (11-02-24) டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலுடன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் அவசரமாக சந்தித்துப் பேசினர். அதில், பஞ்சாப் அரசியலில் அரவிந்த் கெஜ்ரிவால் களமிறங்கி, பகவந்த் மானுக்கு பதிலாக புதிய முதல்வராக கெஜ்ரிவால் பதவி ஏற்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு வசதியாக, காலியாக உள்ள லூதியானா சட்டமன்றத் தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், டெல்லி மற்றும் பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.