Skip to main content

நடிகர் ஜே.கே.ரித்திஷ் திடீர் மரணம்!

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

 

நடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ் (வயது 46) மாரடைப்பால் மரணம் அடைந்தார்.  ராமநாதபுரத்தில் உள்ள இல்லத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

 

jk

 

 இலங்கை கண்டியில் பிறந்த சிவக்குமார் என்கிற ரித்திஷ்  ராமநாதபுரத்தில் குடியேறினார். ’சின்னபுள்ள’படத்தில் அறிமுகமானார்.  கானல்நீர், நாயகன், பெண்சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அண்மையில்  இவர் நடித்த எல்.கே.ஜி. படம் பலராலும் பாராட் டப்பட்டது.     


2009ம் ஆண்டு மக்களவை தேர்தலில் ராமநாதபுரம்  தொகுதியில் திமுக வேட்பாளராக களம் இறங்கி வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றார். தி.மு.க. வேட்பாளர் சிவக்குமார் என்ற ஜே.கே.ரித்திஸ் 2,94,945 வாக்குகள் பெற்று 69 ஆயிரத்து 915 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.  பதவியேற்பின்போது ரித்திஷின் நடை,உடை, தோற்றத்தை பார்த்து ப.சிதம்பரத்திடம் சோனியாகாந்தி விசாரித்ததாகவும், ப.சிதம்பரம் இவரைப்பற்றி கூறிய தாகவும் அப்போது தகவல் வெளியாகின.

 

ராமநாதபுரம் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.கே.ரித்திஷ், 2014ம் ஆண்டில் அதிமுகவில் இணைந்தார். சென்னை போயஸ் கார்டனில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து, அதிமுகவில் அவர் இணைந்தார்.  ஜெ. மறைவுக்கு பின்னர் தினகரன் அணியில்  இருந்தவர் பின்னர் எடப்பாடி அணிக்கு மாறினார்.
 

 நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்திலும் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர் ரித்திஷ்.  திமுக முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், இவருக்கு தாத்தா என்று கூறப்பட்டது. ஆனால், பின்னாளில் தாத்தா பேரனுக்கும் இடையே மோதல் வெடித்தது.  

 

ஜ்க்

 

மறைந்த ரித்திஷுக்கு  ஜோதீஷ்வரி என்ற மனைவியும் ஆரிக் ரோசன் என்ற மகனும் உள்ளனர்.  

 

குறைந்த அளவே படங்களில் நடித்திருந்தாலும் கோடம்பாக்கத்தில் இவரது முகம் தெரியாதவர்கள் எவரும் இருக்கமுடியாது. அந்த அளவுக்கு அனைவரையும் கவர்ந்திருந்தார்.   இவரால் உதவி பெற்றவர்கள் பல ஆயிரம்  பேர்  இருக்கும் என்கிறார்கள்.  கோடம்பாக்கத்தில் இவரை வள்ளல் என்றே அழைத்து கட்-அவுட் வைத்து வந்தனர்.
 

ரித்திஷின் மறைவுக்கு  இயக்குநர் பாரதிராஜா, நாசர், விஷால், கருணாஸ் என்று திரையுலகினரும்,  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலவர் ஓ.பன்னீர் செல்வமும் இரங்கல் தெரி வித்துள்ளனர். 

 

வேறு இயக்கத்தில் சேர்ந்தாலும் தனது பழைய நட்பை மறவாதவர் ரித்திஷ்.  அவருடைய மரண செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் என்று தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

 

 

சார்ந்த செய்திகள்