
நெல்லையில் தொடர்ச்சியாக கொலை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் இது தொடர்பாக தகவல் உரிமைச் சட்டத்தின் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வெளியாகி இருக்கும் பதில்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் நடந்த கொலைகள் குறித்த கேள்விகளுக்கு ஆர்டிஐ கொடுத்த பதில்களின் அடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தமாக 285 கொலைகள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான ஒரே ஆண்டில் மட்டும் 45 கொலைகள் நெல்லையில் நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. நெல்லை மாநகர பகுதிகளில் சாதி ரீதியான கொலைகளும் அதிகம் நடந்துள்ளதாக மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. குடும்ப பிரச்சனை, முன்விரோதம், சாதி பிரச்சனை போன்ற காரணங்களால் அதிக கொலைகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
கொலை சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 192 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், 2020 ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை நெல்லைப் புறநகரில் 211 பேரும், நெல்லை மாநகரில் 74 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் மிகவும் குறிப்பிட தகுந்த வகையில் கொலை சம்பவங்கள் தொடர்பாக மொத்தமாக 60 சிறார்கள் மற்றும் 1045 பேரை கைது செய்திருப்பதாகவும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைக்கப் பெற்றிருக்கும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நேற்று கூட (18/03/2025) நெல்லை காட்சி மண்டபம் பகுதியில் ஓய்வு பெற்ற முன்னாள் காவல்துறை அதிகாரி, அதிகாலையில் தொழுகை முடித்து வருகையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.