உலகம் கரோனா என்கிற வைரஸ் பிரச்சனையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள போராடிக்கொண்டிருக்கிற இந்த நிலையில் திருச்சியில் தன் கணவனுடன் ஏற்பட்ட மனக் கசப்பில் மார்பிங் செய்யப்பட்ட ஆபாசப் படங்களை முகநூலில் வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பாலக்கரை காஜியார் தெருவைச் சேர்ந்தவர் மோகன் ஜெய்கணேஷ். இவர், திருச்சி அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், மயிலாடுதுறை குறிஞ்சி நகரைச் சேர்ந்த சுகுமார் என்பவரின் மகள் தாட்சாயினிக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தாட்சாயினியும் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
திருமணம் ஆன சில மாதங்களில் கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரச்சனை உருவானது. அதைத் தொடர்ந்து கணவர் மோகன் ஜெய்கணேசை பிரிந்து, தனது பெற்றோர் ஊரான மயிலாடுதுறைக்கு தாட்சாயினி சென்று விட்டார். இருப்பினும் கணவர் மீதான கோபம் அவருக்குத் தீரவில்லை. அடிக்கடி செல்போனில் பேசி இருவரும் மாறி மாறி சண்டை போட்டுக்கொள்வார்களாம்.
பேராசியர் மோகன் ஜெய்கணேஷ தன் வாழ்க்கையில் நடக்கும் அத்தனை சம்பவங்களையும் முகநூலில் எழுதுவது வழக்கமாக வைத்திருக்கிறார். இதனால் அவர் அடிக்கடி குடும்பத்தில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள் குறித்து பதிவு செய்து வருந்திருக்கிறார்.
பிரிந்த மனைவியுடன் சேர்ந்து விட வேண்டும் என்று கல்யாணம் குறித்த படங்களை முகநூலில் பதிவு செய்து வருகிறார். இதனால் எரிச்சல் அடைந்த தாட்சாயினி அந்தப் படங்களை டெலிட் செய்யச் சொல்லி டார்ச்சர் செய்திருக்கிறார். ஆனால் மோகன் ஜெய்கணேஷனோ இதை எதையும் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் எப்படியாவது, கணவரை அசிங்கப்படுத்தி கெட்டப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று முகநூலிலே ஏதாவது செய்தால்தான் அது நடக்கும் எனத் திட்டம் போட்டு, தனது கல்லூரி கால நண்பரான கட்டுமான தொழில் செய்யும் தஞ்சாவூர் மாவட்டம், சிவாஜி நகரைச் சேர்ந்த கிருபாகரன்(28) உதவியை நாடினார்.
இருவரும் திட்டமிட்டு, மோகன ஜெய்கணேசின் முகநூல் பக்கத்தில் திருட்டுத்தனமாக அவர் பதிவிட்டதுபோல, சில பெண்களின் ஆபாசப் படங்களை ‘மார்பிங்‘ செய்து பதிவு செய்தனர்.
அவர்கள் எதிர்பார்த்தபடியே அந்தப் பதிவுக்கு பல அருவெறுக்கக்தக்க கருத்துக்கள் பதிவானது. பெண்களின் ஆபாச புகைப்படங்கள் தனது முகநூல் பக்கத்தில் பதிவானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் மோகன ஜெய்கணேஷ்.
இதுகுறித்து பாலக்கரை போலீசில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் விசாரணை நடத்தினார். இந்த வழக்குக் குறித்து சைபர் கிரைம் போலிசார் விசாரணையில் ஈடுபட்டனர். தாட்சாயினி, அவரது நண்பரான கிருபாகரன் ஆகியோர் திட்டமிட்டு மார்பிங் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் இருவர் மீது மோசடி செய்து தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்தியதாக 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் போலீசார்.
பின்னர், முகநூல் பதிவுக்கு உடந்தையாக செயல்பட்ட தாட்சாயினியின் நண்பர் கிருபாகரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள தாட்சாயினியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.