கரோனா வைரஸ் பரவல் முதலில் பரவிய ஈரோட்டில் அதைத் தடுக்கும் தொடர் நடவடிக்கையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட காவல் துறை கண்கானிப்பாளர் சக்திகணேசன், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாவட்ட பொதுச் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் திருமதி சவுண்டம்மாள் ஆகிய உயர் அதிகாரிகள் நேரடியாகக் களம் இறங்கினர். மேலும், பணியாளர்கள் மற்றும் ஊழியர்களின் கடும் உழைப்பாலும் நோய்ப் பாதிப்புக்குள்ளானவர்கள் 70 பேர் என்ற அளவிலேயே நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து யாருக்கும் வைரஸ் பரவாமல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஒரு மாதம் இதே நிலை நீடித்ததால் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால் சென்னை உட்பட வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் ஈரோடு வந்தனர். அப்படி வந்த சிலருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மீண்டும் ஈரோட்டில் கரோனா வைரஸ் பரவத்தொடங்கியது. தற்போது வரை எண்ணிக்கை 200 வரை வந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த மருத்துவக்கல்லூரி பெருந்துறையில் உள்ளது. இந்த நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர் தங்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை, உணவு-குடிநீருக்குச் சிரமமாக உள்ளது, பணியாளர்கள் உதவும் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதில்லை என வாட்ஸ்அப்பில் பேசி அனுப்பினார்கள்.
இந்த வாட்ஸப் பதிவு வைரலாகப் பரவியது. இது ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் கவனத்துக்கும் சென்றது. ஆட்சியர் கதிரவன் உடனடியாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அதிகாரிகளிடம் பேசி கரோனா வார்டில் உள்ளவர்களுக்கு முறையான சிகிச்சையும் உணவும் தேவையான அடிப்படை வசதிகளையும் உடனே செய்து கொடுங்கள் என உத்தரவிட்டார். அதோடு நிற்காமல் திடீரென்று வியாழக்கிழமை மதியம் அந்த மருத்துவமனைக்கு நேரில் சென்றார். பிறகு கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் உள்ள வார்டுக்குச் சென்றுள்ளார்.
அப்போது சில ஊழியர்கள், ஐயா வைரஸ் தொற்று உள்ளவர்கள் வார்டுக்கு வேண்டாமே எனக்கூற, "நான் பாதுகாப்பாக இருப்பதை உணர்கிறேன். மக்கள் பணி செய்யத் தயக்கம் கூடாது. அவர்கள் குறை கூறியுள்ளார்கள். தற்போது அது நிவர்த்தி ஆகி விட்டதா என்பதை நேரில் சென்று தான் கேட்பேன்" எனக் கூறிவிட்டு அந்த வார்டுகளுக்கு நேரடியாகச் சென்றார்.
அங்கிருந்த பெண்கள் மற்றும் சிலரை அழைத்த ஆட்சியர் கதிரவன் உங்களுக்கு அடிப்படையான தேவைகளை இந்த மருத்துவமனை செய்து கொடுக்கிறதா எனக் கேட்டார். அதற்கு அவர்கள், ஐயா இப்போது அனைத்தும் எங்களுக்கு வழங்கப்படுகிறது எந்தப் பிரச்சினையும் இல்லை எனக் கூறினார்கள். அதன்பிறகு சிறிது நேரம் அவர்களோடு பேசிவிட்டு வெளியே வந்தார் ஆட்சியர் கதிரவன்.
வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெறுபவர்களின் மருத்துவ வார்டுக்குச் சென்று அவர்களுக்கு நம்பிக்கையூட்டி வந்த மாவட்ட ஆட்சியர் கதிரவன் அனைவராலும் பாராட்டப்படுகிறார்..