சில நாட்களுக்கு முன்பு ஶ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்ற பிரபல பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன், அங்கிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டார். பலமுறை இந்தக் கோயிலில் வழிப்பட்ட என்னை இப்போது எதற்காக தடுக்கிறீர்கள் என்று அவர் கேள்வி எழுப்பியும், அங்கிருந்த நரசிம்மன் என்பவர் அவரை வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்துள்ளார். ஒருகட்டத்தில் வெளியேற மறுத்த ஜாகீரிடம் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி கோயிலுக்கு வெளியே கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்.
இதனால் மனமுடைந்த அவருக்கு, இரத்த கொதிப்பு அதிகமாகவே அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பான செய்திகள் சமூகவலைதலங்களில் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த அறநிலையத்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கோயிலில் என்ன நடந்தது, எதற்காக உங்களை வெளியேற்றினார்கள் என்பது குறித்த கேள்விகளை ஜாகீர் உசேன் அவர்களிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
உங்களின் பெயரைத் தெரியாதவர்கள் உங்களின் நடனத்தைப் பார்த்து ரசித்துவிட்டு, பெயரைக் கேட்டதும் ஆச்சரியப்பட்டுப் போன பல சம்பவங்களை நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம். நீங்களே கூட கேட்டிருக்கலாம். முஸ்ஸிம் சமூகத்தில் பிறந்த உங்களுக்குப் பரதநாட்டியம் கற்றுக்கொள்ள வேண்டும், அதனை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்ற தோன்றுவதற்கு அடிப்படையாக எது இருந்தது?
சிறிய வயதில் நான் வளர்ந்த விதமே அப்படியான ஒரு இனிமையான சூழல்தான் இருந்தது. இந்தப் பக்கம் உறவினர் வீட்டிற்குச் சென்றால் கோயிலுக்குச் செல்ல வேண்டும், எதிர்புறம் சென்றால் குரான் படிக்கலாம் என்ற வாய்ப்புகள் ஒருசேர இருந்தன. சிறுவயதில் இருந்தே எந்தவித மத வேறுபாடுகளும் இன்றி நான் அனைத்து மதத்தினரோடும் கலந்தே வளர்ந்து பழக்கப்பட்டவன். தர்மபுரியில் சிறு கிராமத்தில் பிறந்த எனக்கு, இந்த அளவு வளர அந்த ஒற்றுமையுணர்வு மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தது. எங்கள் ஊரில் சாதியைப் பற்றி பேசினாலே ஊரைவிட்டு தள்ளிவைத்துவிடுவார்கள். அங்கே அப்படியான ஒன்றே சிறுவயதில் நான் பார்த்தில்லை. சென்னை வந்தபிறகுதான் இந்த சாதிப் பிரிவினைகளைப் பற்றி தெரியவந்தது.
இப்போது எனக்கு அது ஆச்சரியமாகக்கூட இருந்தது. என்னை வளர்த்த என்னுடைய பெரியம்மா அதிமுக, பெரியப்பா திமுக. இன்னும் சொல்லப் போனால் என்னுடைய அம்மா காங்கிரஸ், எங்கள் அப்பா தீவிர திமுக. அதாவது 70 வருடத்துக்கு முன்பே அவர்களுக்கு ஒரு பரந்துபட்ட மனது இந்த விஷயத்தில் இருந்துள்ளது. அதனால் எனக்குப் புதிய புதிய விஷயங்களில் கவனம் செலுத்தும் வாய்ப்பு ஏற்பட்டது, அப்படி கற்றுக்கொண்டதுதான் இந்தப் பரதம். கோயிலுக்குப் போவதற்கு என் பெரியம்மா மிக முக்கிய காரணம். சிறுவயதில் தொடங்கிய இந்தப் பழக்கம் இன்றளவும் தொடர்கிறது. தமிழ்நாட்டில் நான் போகாத கோயில்களே இல்லை என்ற அளவுக்கு அனைத்து கோயிலுக்கும் சென்றுவந்துள்ளேன். கிட்டதட்ட மூன்று வயதிலிருந்து இந்தப் பழக்கம் என்னிடம் இருக்கிறது. முஸ்ஸிம் சமூகத்தில் யார் கோயிலுக்குச் சென்றாலும் என்னை அழைத்துச் சென்றுவிடுவார்கள். எனக்கு மதங்களுக்கு இடையேயான வித்தியாசம் எப்போதும் இருந்ததில்லை.
மூன்று வயதுமுதல் கோயில்களுக்குச் சென்றுவருவதாக கூறியுள்ளீர்கள், ஶ்ரீரங்கம் கோயிலுக்கு நீங்கள் இதுவரை எத்தனை முறை சென்றுவந்துள்ளீர்கள்?
எனக்கு எப்போதும் பழைய நினைவுகள் மறந்து போகாது. அதை ஒருவரமாக நான் நினைக்கிறேன். சிறுவயதிலிருந்தே அந்தக் கோயிலுக்கு நான் சென்றுவந்துள்ளேன். குறிப்பாக இளையராஜா சார் கோயிலில் புதிய மண்டபம் கட்டுவதற்கு இசை நிகழ்ச்சி நடத்தி பணம் கொடுத்துள்ளார். இந்த நரசிம்மன் போன்ற ஆட்கள் அப்போது இருந்திருந்தால் அவரால் அதைச் செய்திருக்க முடியாது. அதற்கு முன் எந்த நிகழ்ச்சியையும் அவர் வெளியே நடத்தியதில்லை. இந்தக் கோயிலுக்காக முதல்முறையாக அவர் இசை நிகழ்ச்சியை நடத்தினார். இதேபோன்ற நபர் முன்பே இருந்திருந்தால் அவரிடம் ஆயிரம் கேள்விகளைக் கேட்டு அவரையும் புண்படுத்தியிருப்பார்கள். என்னிடம் வேண்டுமென்றே ரங்கராஜன் நரசிம்மன் தகராறு செய்தார். அவர் இதுவரை எங்கிருந்தார். அமெரிக்காவில் செய்யக் கூடாத செயல்களைச் செய்து தண்டனை பெற்று, அங்கிருந்து இங்கே வந்து அராஜகம் செய்துவருகிறார்.
அதுவும் ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகுதான் இந்த ஆட்டம் ஆடிவருகிறார். அதற்கு முன் இருக்கும் இடம் தெரியாமல் இருந்துவந்தார். ஐம்பது பைசாவுக்கு நாமம் வாங்கிப் போட்டுக்கொண்டால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற உரிமையை அவருக்கு யார் கொடுத்தது. இந்தக் கோயிலை நான்தான் காத்துவருகிறேன், என்னைவிட்டால் வேறு யாருக்கும் அந்த அதிகாரம் இல்லை என்பது எவ்வளவு அராஜகமான பேச்சுகள். இதை எப்படி தொடர்ந்து அனுமதிப்பது. இவர் என்னை மட்டுமல்ல, கோயில் பட்டாச்சாரியார்கள், அறங்காவலர்கள் என அனைவரையும் கேவலமாக தொடர்ந்து பேசிவருகிறார்.
உனக்கும் கோயிலுக்கும் என்ன சம்பந்தம், எனக்கும் கோயிலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கேள்வி கேட்க உனக்கு எந்த உரிமையும் இல்லை. நீ கோயில் கட்ட ஏதாவது செங்கல் எடுத்துக் கொடுத்தாயா? நானும் கொடுக்கவில்லை, ஆனால் யாரையும் தடுக்கவில்லையே? உனக்கு அந்த அதிகாரம் எங்கிருந்து வந்தது, யார் கொடுத்தது. என்ன, பிறப்பால் நான் முஸ்லிமாக பிறந்துவிட்டேன். அதற்கு யாரும் எதுவும் செய்ய முடியாது. அது இயற்கையான ஒன்று. அதை எதிர்த்து நீ அல்ல, யாரும் கேள்வி கேட்க முடியாது. என்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் முயற்சித்தார். கடவுள் அவருக்கு உரிய பதிலைத் தருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.