ஏப்ரல் 1. தமிழகம் முழுவதும் ஜனநாயக திருவிழாவுக்கான ஏற்பாடுகள் களைகட்டிக்கொண்டிருந்தபோது, ரஜினியின் அரசியல் முடிவால் சற்றே சோர்வடைந்திருந்த அவரது ரசிகர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் வெளியானது அந்த அறிவிப்பு.
இந்திய சினிமாவில் நான்கு தசாப்தங் களைக் கடந்தும் மக்கள் மனதில் அசைக்கமுடியா சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் ரஜினிக்கு இந்திய திரைத் துறைக்கான மிக உயரிய விருதான "தாதாசாகேப் பால்கே விருது' வழங்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு. தமிழ் திரைத்துறையில் சிவாஜி கணேசன் மற்றும் இயக்குனர் பாலச்சந்தருக்குப் பிறகு இந்த விருதினைப் பெறும் மூன்றாவது நபர் ரஜினிதான்.
"இந்திய சினிமாவின் தந்தை' என வர்ணிக்கப்படும் இயக்குனர் தாதாசாகேப் பால்கே பெயரால் 1969-ஆம் ஆண்டுமுதல் மத்திய அரசு வழங்கிவரும் இந்த விருது, திரைத்துறையின் வளர்ச்சிக்காகப் பங்காற்றிய கலைஞர்களைக் கௌரவிக்க வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். பெருந்தொற்று காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விருது வழங்கப் படாமல் இருந்த சூழலில், "2019-ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது ரஜினிக்கு வழங்கப்படும்' என மத்திய அரசு அறிவித்தது.
இந்த விருது அறிவிப்பை ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமுமே கொண்டாடியது. அதற்கு மிகமுக்கிய காரணம், ரஜினி என்ற பெயருக்கு இன்றளவும் இருக்கும் அந்த "மாஸ்'தான். இதற்குமுன்பு இந்த விருதினைப் பெற்ற சாதனையாளர்களைப் போல அல்லாமல், "சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தோடு தனது கரியரின் உச்சத்தில் இருக்கும்போதே இந்த விருதினை பெற்றுள்ளார் ரஜினி. 1975-ல் "அபூர்வ ராகங்கள்' படத்தில் ரஜினி திறந்த அந்த கேட், அவரை கருப்பு வெள்ளை, ஈஸ்ட்மேன் கலர், அனிமேஷன், 3டி படங்கள் என நீண்டநெடிய பாதையில் "அண்ணாத்த' வரை வெற்றிகரமாகப் பயணிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் அதுவரை ஹீரோவுக் கென இருந்த இலக்கணத்தை உடைத்து, திறமை மற்றும் உழைப்பை மட்டுமே கொண்டு படிப்படியாகத் திரையுலகின் உச்சிக்கு ஏறி வந்த நடிகர் அவர். ஆண்டுக்கு இருபது படங்கள் வரை கூட ரஜினி நடித்த காலகட்டம் உண்டு. சிறிய வேடங்களில் தொடங்கி, வில்லன், குணச்சித்திர நடிகர், ஹீரோ, சூப்பர் ஸ்டார் என 45 ஆண்டுகால தனது சினிமா பயணத்தில், தலைமுறைகள் கடந்து அனைத்து வயதினரை யும் தன்னை ரசிக்க வைத்த ரஜினி, இன்று தனது எழுபதாவது வயதிலும் தன்னை ரசிக்க வைக்கிறார் என்பதே அவ ரது வெற்றிக்கான காரணம்.
புதிய தொழில்நுட்பங்கள், புதிய ஜானர்கள், புதியவர்களுடன் இணைந்து பணியாற்றுவது எனக் காலத்திற்கேற்பத் தன்னை தகவமைத்துக்கொண்ட ரஜினி சிறந்த நடிகராகவும், மாஸ் என்டர் டெய்னராகவும் தன்னை மக்கள் மனதில் பதிய வைத்தார். தென்னிந்தியாவைக் கடந்து வடஇந்தியாவிலும், ஏன்? சர்வதேச அளவிலும் கூட தனக்கான ரசிகர் வட்டத்தை விரி வாக்கியுள்ளார் ரஜினி. நடிகர் என்பதைக் கடந்து தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என சினிமாவின் பல்வேறு தளங்களில் பயணித்த ரஜினி இன்று அடைந்திருக்கும் உயரம் அசாத்தியமானது. இந்திய சினிமாவின் 108 ஆண்டுகால பயணத்தில் 45 ஆண்டுகள் ரஜினியும் பயணித்திருக்கிறார் என்பதே இந்திய சினிமா மீதான அவரது தாக்கத்தை நமக்கு புரியவைக்கும்.
"முரட்டுக்காளை' தொடங்கி "பாட்ஷா', "படையப்பா', "தர்பார்' வரை தலைமுறை கடந்து தாறுமாறான பல மாஸ் படங்களைக் கொடுத்த ரஜினி, "முள்ளும் மலரும்', "16 வயதினிலே', "ஆறி லிருந்து அறுபது வரை' என நடிப்புக்குப் பெயர் சொல்லும் படங் களைக் கொடுக்கவும் தவறியதில்லை. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கால உழைப்பின்மூலம் இந்திய சினிமாவின் பாட்ஷாவாக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ரஜினிக்கு "பால்கே விருது' என்பது தமிழ் சினிமாவுக்கான தேசிய அங்கீகாரமே.